பென்சன்.. அரசு ஊழியர்களின் இடைக்கால மாதாந்திர வழங்குத்தொகை உயர்வு எவ்வளவு.. அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (taps) முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை, 1.1.2026 முதல் வயது முதிர்வில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு இடைக்கால மாதாந்திர வழங்குத் தொகையை அரசு அனுமதித்துள்ளது. இந்தத் தொகை அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் (எது அதிகமோ அது) மற்றும் அகவிலைப்படி நிவாரணத்துடன் கணக்கிடப்படுகிறது.இந்த சூழலில் அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து அரசு ஊழியர்களின் மாதாந்திர வழங்கும் தொகை உயர்தத்ப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1.7.2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால வழங்குத் தொகை மற்றும் குடும்ப வழங்குத் தொகைக்கான அகவிலைப்படி நிவாரணத்தையும் 63 சதவீதமாக உயர்த்தி நிதித்துறை (செலவினம்) செயலாளர் அருண்ராய் அரசாணையை வெளியிட்டிருக்கிறார்.

தகுதியானவர்களுக்கு கிடைக்கும்
இதன் மூலம் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான நிலுவைத் தொகை உரியவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த இடைக்காலத் தொகை, இறுதியாக டாப்ஸ் அல்லது சி.பி.எஸ். திட்ட பலன்களில் பொருந்தக்கூடிய வட்டியுடன் சரிக்கட்டப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட நிலுவைத் தொகையைத் தகுதியானவர்களுக்கு உடனடியாக வழங்க கருவூலங்கள் மற்றும் கணக்குத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாட்டில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) கடந்த 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அறிமுகம் ஆனது. எனினும், இத்திட்டத்திற்கான விரிவான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை, 2026 ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால மாதாந்திரத் தொகை வழங்கப்படுகிறது.
10 ஆயிரம் வழங்கப்படுகிறது
அதன்படி, அரசு ஊழியர்களுள் ஓய்வு பெற்ற நாளில், கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் ரூ. 10,000, இவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதனுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்படுகிறது.
மாதாந்திர உதவித்தொகை
அதேபோல், 2026 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் உயிரிழந்தால், அவருக்குக் கிடைக்க வேண்டிய இடைக்கால மாதாந்திரத் தொகையில் 60 சதவீதம் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு குடும்பத் தொகையாக வழங்கப்படுவதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பணியில் இருக்கும்போதே உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் இடைக்கால குடும்பத் தொகை வழங்கப்படும் நடைமுறையும் தொடர்கிறது
அகவிலைப்படி 63 சதவீதமாக உயர்வு
இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணமும் 63 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இடைக்கால ஓய்வூதியம் மற்றும் குடும்பத் தொகை பெறுவோருக்கான அகவிலைப்படி நிவாரணத்தையும் 60 சதவீதத்தில் இருந்து 63 சதவீதமாக உயர்த்த அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளளது.
கூடுதல் செலவு
மேலும், இந்த உயர்வின் காரணமாக 2026 ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையும், அந்த மாதங்களில் இடைக்கால ஓய்வூதியம் அல்லது குடும்பத் தொகை பெறத் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வுக்கான கூடுதல் செலவினம், இடைக்காலத் தொகைக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது அரசு. நிலுவைத் தொகையைத் தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கும், அரசாணையை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக எவ்வளவு கிடைக்கும்
எனினும் தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, தற்போது வழங்கப்படும் இடைக்காலத் தொகை, அந்த திட்டத்தின் கீழ் இறுதியாகக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களுடன் சரிசெய்யப்படும். தேவைக்கேற்ப ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகை நிலுவையாகக் கணக்கிடப்படலாம் அல்லது கூடுதலாக வழங்கப்பட்ட தொகை வட்டியுடன் வசூலிக்கப்படலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
