திமுகவிடம் கெஞ்சும் காங்கிரஸ்? மம்தா பானர்ஜியை தூது அனுப்பிய ராகுல்.. தொகுதி மறுசீரமைப்பால் அச்சம்
டெல்லி: டெல்லி அரசியலில் இப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி.. ஆறு மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி, இப்போது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைத் தடுத்து நிறுத்துவதற்காக மீண்டும் திமுகவின் ஆதரவைப் பெறத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்பதுதான்.
தேசிய ஊடகங்களின் செய்திகளின்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சமாதானப்படுத்த மேற்கு வங்க ,மாஜி முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்தியஸ்தம் செய்து வருகிறார்.

6 மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது?
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக உடனான நீண்டகாலக் கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்தது. தேர்தல் அப்போதே காங்கிரஸ் திமுகவிற்கு வேலை செய்யவில்லை. ராகுல் ஸ்டாலினை சந்திக்கவில்லை. ராகுல் ஸ்டாலினின் போனை கூட எடுக்கவில்லை. இதெல்லாம் திமுகவிற்கு காங்கிரஸ் செய்த துரோகம். முக்கியமாக ராகுலை 5 வருடத்திற்கு ஒரு முறை முதல் ஆளாக பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினுக்கு நேர்ந்த துரோகம்.
இதனால் 'இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறிய திமுக, தனது 22 மக்களவை எம்பிக்களுடன் தனித்துச் செயல்படத் தொடங்கியது.
காங்கிரஸுக்கு ஏன் இப்போது திமுக தேவைப்படுகிறது?
வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில், மத்திய பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் கொண்டு வரவுள்ளது. மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு 360 எம்பிக்களின் ஆதரவு தேவை.
கடந்த ஏப்ரல் மாதம் போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்த இந்த மசோதா, இப்போது திமுகவின் 22 எம்பிக்கள் மற்றும் சரத் பவார் கட்சியின் 8 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தால் நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள காங்கிரஸ் தலைமை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காப்பாற்ற திமுகவை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. திமுக கோரிக்கை வைத்த மாற்றங்களையும் இந்த மசோதாவில் மோடி அரசு செய்துள்ளது.
மம்தா பானர்ஜியின் சமாதான முயற்சி!
சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, மம்தா பானர்ஜி தொடர்ந்து மு.க.ஸ்டாலினுடன் பேசி, எதிர்க்கட்சிகளின் அணியில் திமுக இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இன்று காலை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். "அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் திமுக, பாஜகவின் பிரித்தாளும் திட்டத்தை ஆதரிக்காது என நம்புகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலினின் கறார் பதிலும், நிலைப்பாடும்!
ஆனால், காங்கிரஸின் இந்தச் சமாதான முயற்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் இதுவரை பிடிகொடுக்கவில்லை. நேற்று (நவம்பர் 27) அவர் வெளியிட்ட அறிக்கையில், "பதவிக்காகக் கொள்கைகளைக் கைவிட்ட துரோகிகளின் புலம்பல்கள் எங்கள் முடிவை எந்த வகையிலும் அசைக்க முடியாது" என மறைமுகமாகக் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தொகுதிகள் உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத இடங்கள் எந்தச் சூழ்நிலையிலும் குறையக்கூடாது. 1971 மக்கள்தொகை அடிப்படையிலான தற்போதைய மாநில விகிதம் மேலும் 25 ஆண்டுகளுக்கு மாற்றப்படக் கூடாது.
அடுத்தது என்ன?
சென்னையில் இன்று நடைபெறும் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எடுக்கப்போகும் இறுதி முடிவு குறித்து ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார். ராகுல் காந்தியும் காங்கிரஸும் ஆறு மாதங்களுக்கு முன்பு உடைத்த உறவை, மம்தா பானர்ஜியின் தலையீட்டால் மீண்டும் ஒட்டவைக்க முடியுமா அல்லது தமிழ்நாட்டின் நலனை முன்வைத்து திமுக தனி முடிவெடுக்குமா என்பது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications
