அறங்காவலர் குழுவில் கிறிஸ்துவர்.. வாதத்திலேயே தவறு ! அது எப்படிங்க ஒரு அரசு இவ்வளவு சொதப்ப முடியும்
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள் தமிழக வெற்றிக் கழக தலைமையிலான அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இதில் தமிழக அரசு கடுமையான பல சொதப்பல்களை செய்துள்ளது.
கோவில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகிகளாக நியமித்ததோடு, மலையை சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவும், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட 8 பேருக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஒரு மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் இவ்வளவு பெரிய நெருக்கடியைச் சந்தித்ததற்குப் பின்னால், நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் செய்யப்பட்ட 5 முக்கியத் தவறுகளே காரணம் என அரசியல் மற்றும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அறங்காவலர் குழுவில் கிறிஸ்துவர் நியமனம் - சர்ச்சையான பின்னணி
இந்த வழக்கில் தவெக அரசு செய்த மிகப்பெரிய தவறு, கடைசி நேரத்தில் கோவில் அறங்காவலர் குழுவை மாற்றியமைத்ததுதான். உச்ச நீதிமன்ற உத்தரவு வருவதற்கு ஒரு வாரம் முன்பு, அதாவது நவம்பர் 13-ம் தேதிதான் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கே. ரெஜினா தேவி என்பவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இந்து கோவிலின் அறங்காவலர் குழுவில் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும் ஒருவரை நியமித்தது எப்படி என்ற கேள்வி உச்ச நீதிமன்றத்திலேயே எழுப்பப்பட்டது. அதுமட்டுமின்றி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது மாணவர்களிடம் ஜாதிய ரீதியாக வசைபாடியதாகவும், லஞ்சம் கேட்டதாகவும் ரெஜினா தேவி மீது ஏற்கனவே புகார்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றக் கூடாது எனத் தொடர்ந்து போராடி வந்த ஒரு நபரையும் இதே குழுவில் சேர்த்துள்ளனர்.
இத்தகைய சர்ச்சைக்குரிய நபர்களைக் கொண்ட குழு, தீபம் ஏற்றக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறியதை உச்ச நீதிமன்றம் துளியும் நம்பவில்லை. வழக்கு விசாரணையில் தோற்பதற்காக தவெக அரசே தனக்குத்தானே வைத்துக்கொண்ட பொறியாக இது மாறிவிட்டது.
பொறுப்பேற்காமல் அதிகாரிகள் ஆடிய பழி போடும் ஆட்டம்
தீபம் ஏற்றாததற்கான பொறுப்பை அரசுத் தரப்பு நேர்மையாக ஏற்கவில்லை. மாறாக, மாவட்ட ஆட்சியர் "நான் ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன், அறங்காவலர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கைவிரித்தார். கோவில் செயல் அலுவலரோ "மதச் சடங்குகளில் நான் தலையிட முடியாது" என்றார். அறங்காவலர்கள் அர்ச்சகர்கள் (ஸ்தானிகர்கள்) மீது பழி போட்டனர். இப்படி ஒவ்வொரு துறையும் மற்றொரு துறை மீது பழியைத் தூக்கிப் போட்டதால், "நீங்கள் வடிப்பது முதலைக் கண்ணீர்" என நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.
லவீனமான வழக்கறிஞர்களும், கோட்டைவிட்ட வாதமும்
நேற்றைய விசாரணை என்பது 'நீதிமன்ற அவமதிப்பு' தொடர்பானது மட்டுமே. ஆனால், உச்ச நீதிமன்றம் பிரதான வழக்கில் பிறப்பிக்க வேண்டிய முக்கிய உத்தரவுகளான கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றுவது, சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்குவது போன்ற உத்தரவுகளை அவமதிப்பு வழக்கிலேயே பிறப்பித்துவிட்டது. அவமதிப்பு வழக்கில் இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது எனத் தவெக அரசு நியமித்த வழக்கறிஞர்கள் வலுவாக வாதிட்டுத் தடுக்கத் தவறிவிட்டனர்.
சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை சரியாக எடுத்துரைக்காதது
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால், தமிழகத்தில் தேவையற்ற பதற்றமும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் என்ற முக்கியமான வாதத்தை அரசுத் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் அழுத்தமாக முன்வைக்கவில்லை. தேவையற்ற தொழில்நுட்பக் காரணங்களைப் பேசி நேரத்தை வீணடித்ததே பின்னடைவுக்குக் காரணமாக அமைந்தது.
போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யாதது
கடந்த கால வரலாற்று ஆவணங்கள் மற்றும் கோவில் மரபுகள் தொடர்பான வலுவான ஆதாரங்களைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையாகத் தாக்கல் செய்யவில்லை. அரசின் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் ஒருங்கிணைந்து செயல்படாததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு படுதோல்வியைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications
