வாங்க..வாங்க! சிஆர்பிஎப் வீரர்களை பூத்தூவி வரவேற்பு கொடுத்த முருக பக்தர்கள்!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளுக்காக கோவையில் இருந்து வருகை தந்த மத்திய ரிசர்வ் காவல் படையினருக்கு பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள மலைமீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி தீபம் ஏற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற விசாரணையில், இன்று மாலைக்குள் திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருப்பரங்குன்றம்
இதையடுத்து, இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கோவையிலிருந்து வருகை தந்த 1000-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களுக்கு மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணிகள் ஒதுக்கப்பட உள்ளது.
சிஆர்பிஎஃப் வீரர்கள்
இந்நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்புப் படையினரை வரவேற்கும் வகையில் பொதுமக்களும், முருக பக்தர்களும் திரண்டு வந்தனர். அப்போது மேளதாளங்கள் முழங்க, மலர்களைத் தூவி அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பாதுகாப்புப் படையினரின் வருகையைப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், வரவேற்பு நிகழ்வில் முருக பக்தர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கார்த்திகை தீபம்
இதற்கிடையே, இன்று மாலை நடைபெற உள்ள தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை அடிவாரம், மலைக்குச் செல்லும் பாதைகள், கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
மலர் தூவி வரவேற்பு
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற உள்ள இந்த தீபம் ஏற்றும் நிகழ்வை எதிர்நோக்கி திருப்பரங்குன்றம் பகுதியில் காலை முதலே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மத்திய பாதுகாப்புப் படையினரின் வருகையும், அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்கள் அளித்த மேளதாள வரவேற்பும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
சிக்கந்தர் தர்கா
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் வருகை தந்தனர். இன்று காலை மட்டும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் பெயர், ஆதார் உள்ளிட்ட அடையாள விவரங்களைச் சேகரித்து, வீடியோ பதிவு செய்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
பக்தர்களுக்கு அனுமதி
இதனைத் தொடர்ந்து, பழனி ஆண்டவர் திருக்கோயில் வழியாக மலைமீது உள்ள சிக்கந்தர் தர்காவிற்குச் செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்தனர். மேலும், மலைமீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காகவும், இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வைக் காண்பதற்காகவும் ராஜபாளையத்தில் இருந்து வந்த பக்தர் ஒருவரிடமும் பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்த பின்னர் மலைப்பகுதிக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.


Click it and Unblock the Notifications
