செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.. தலைகீழாக தொங்கவிட்டு சித்ரவதை.. சிபிசிஐடி மீது இளைஞர்கள் புகார்
விழுப்புரம்: செஞ்சி ஆலம்பூண்டியை சேர்ந்தவர்களான செல்போன் கடை நடத்தி வரும் ராஜ்குமார் , சென்னையில் சரக்கு வாகனம் ஓட்டி வரும் கமல்ராஜ் பெங்களூருவில் கூலி வேலை செய்து வரும் ரேணு ஆகியோர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். செஞ்சி சிறுமி மாயமான வழக்கில், ரூ.2 லட்சம் தருகிறோம், உண்மையை ஒப்புக்கொள் என்று கூறி கை, கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு லத்தியால் அடித்து துன்புறுத்தியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீது குற்றம்சாட்டி புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஆலம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பவானி. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஹேமலதா என்ற மகள் உள்ளார். சிறுமி ஹேமலதா கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி வீட்டில் பெற்றோருடன் படுத்து உறங்கி கொண்டிருந்தாள். மறுநாள் அதிகாலை அவள் திடீரென காணாமல் போனார்.

சிபிசிஐடி போலீசார் மீது புகார்
சிறுமி ஹேமலதா காணாமல் போய், இன்றுடன் 48 நாட்கள் ஆகிவிட்டத. சிறுமியை கண்டுபிடிக்க 50 பேர் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், தனித்தனி குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்தவித துப்பும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. சந்தேத்தின் பேரில் போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தியும் வருகிறார்கள். செஞ்சி சிறுமி ஹேமலதா காணாமல் போன வழக்கில் தங்களை சந்தேகத்தின்பேரில் அழைத்துச் சென்று தொடர்ந்து அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீது 3 இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
இளைஞர்கள் குற்றச்சாட்டு
செஞ்சி ஆலம்பூண்டியை சேர்ந்தவர்களான செல்போன் கடை நடத்தி வரும் ராஜ்குமார் (26), சென்னையில் சரக்கு வாகனம் ஓட்டி வரும் கமல்ராஜ் (25), பெங்களூருவில் கூலி வேலை செய்து வரும் ரேணு (30) ஆகியோர் நேற்று மதியம் தங்கள் குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனிடம் புகார் மனு கொடுத்தனர். அம்மனுவில் ,சிறுமி ஹேமலதா காணாமல் வழக்கில் எங்கள் 3 பேரையும் விசாரணை என்ற பெயரில் கடந்த ஒரு வார காலமாக விழுப்புரத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடித்து துன்புறுத்தியாக குற்றம்சாட்டியுள்ளனர்.
தலைகீழாக தொங்க விட்டனர்
மேலும் எங்கள் 3 பேருடைய சட்டையை கழற்றியதுடன் எங்கள் கை, கால்களை கட்டிப்போட்டு தலைகீழாக தொங்க விட்டு லத்தியால் அடித்தார்கள் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். ஆசனவாயில் லத்தியை விட்டும் அடித்து துன்புறுத்தினார்கள் என்றும் பகீர் புகாரை கூறியுள்ளனர். எங்களிடம் ரூ.2 லட்சம் தருகிறோம் என்றும், உண்மையை ஒப்புக்கொள்ளும்படியும் கூறி அடித்தனர் என்றும், இதனால் நாங்கள் மனவேதனையில் விபரீத முடிவெடுத்து உயிரைவிட்டுவிடும் மனநிலையில் உள்ளோம். எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளனர்..
பணம் தருவதாக கூறினார்கள்
புகார் அளித்த பின்னர் வெளியே வந்த அவர்கள் 3 பேரும், செய்தியாளர்களிடம் பேசுகையில்இ "எங்களுக்கும், செஞ்சி ஆலம்பூண்டி சிறுமி ஹேமலதா மாயமான சம்பவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது ஆனால் பணம் தருகிறோம், உண்மையை ஒப்புக்கொண்டால் இவ்வழக்கில் இருந்து விடுவித்து விடுகிறோம் என்று கூறி போலீசார் அடித்தார்கள். இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று எங்களை மிரட்டினர்" என்று குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதுபற்றி சிபிசிஐடி போலீசார் தரப்பு விளக்கம் அளித்தால் தான் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவரும். போலீசார் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினால் தான் இது உண்மையா இல்லையா என்பதும் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications
