சேமிப்பு வங்கி கணக்கில் பணம் வைத்திருப்பவர் இறந்துவிட்டால்? வாரிசுகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்
சென்னை: ஒருவர் இறந்துவிட்டால், அவர் வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணம் என்னவாகும்? அந்தப் பணம் அவருடைய குடும்பத்தினருக்கு கிடைக்குமா? வங்கிக் கணக்கு விவரம் தெரியாமல் இருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற கேள்விகளுக்கு மத்திய அரசு முக்கியமான தகவலை தெரிவித்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் திடீரென இறந்துவிட்டால், அவருடைய வங்கி கணக்கு, அஞ்சலக சேமிப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குடும்பத்தினருக்கு தெரியாமல் போகலாம். சிலருக்கு பணம் இருப்பது தெரிந்தாலும், அதை எப்படி திரும்பப் பெறுவது என்பது புரியாமல் இருக்கும்.

இறந்தவர்களின் வங்கி கணக்குகள்
இதனால் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக வங்கிகளுக்கும், சில நேரங்களில் நீதிமன்றத்துக்கும் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை சரிசெய்யக் கோரி பத்திரிகையாளர் சுசேதா தலால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "இறந்தவர்களின் வங்கி கணக்குகள், அஞ்சலக கணக்குகள், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் இருக்கும் பணம் குறித்த விவரங்கள் அவர்களுடைய சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு தெரிவதில்லை. அந்த பணத்தை பெறுவதற்காக தேவையில்லாமல் வழக்கு தொடர வேண்டிய நிலையும் உள்ளது. .அதனால் இறந்தவர்களின் பெயரில் உரிமை கோரப்படாமல் இருக்கும் பணம் குறித்த விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளும் வகையில், ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் ஒரு தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ரூ.6,453 கோடி வாரிசுகளிடம் ஒப்படைப்பு
இந்த மனு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வெங்கடராமன் முக்கியமான தகவலை தெரிவித்தார். வங்கிகள், அஞ்சலகங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் உரிமை கோரப்படாமல் இருக்கும் பணத்தை, இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்க வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, கடந்த மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் பேர் தங்களுடைய பணத்துக்கான உரிமையைப் பெற்று இருக்கிறார்கள். இன்னும் 10 சதவீத கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும், இதுவரை ரூ.6,453 கோடி பணம் வாரிசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன?
இந்த வழக்கில் நீதிபதிகள் விக்ரம்நாத், ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, மனுவில் எழுப்பப்பட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலும் தீர்வு கிடைத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், இந்த மனுவை தொடர்ந்து நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், இனியும் உரிமை கோரப்படாத பணம் தொடர்பாக யாருக்காவது பிரச்சினை இருந்தால், சட்டப்படி உரிய அதிகாரிகளை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், இறந்தவர்களின் பெயரில் வங்கிகள், அஞ்சலகங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் இருக்கும் பணத்தைப் பெறுவதில் வாரிசுகளுக்கு உதவும் நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது..!!


Click it and Unblock the Notifications
