தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 'பேட்மிண்டன் வாரியர்ஸ்'! வீரர்களுக்கு தொழிலதிபர் ஷாலி அழைப்பு
துபாய்: துபாய் விளையாட்டு கவுன்சில் அனுமதியுடன், சர்வதேச விளையாட்டு கமிட்டியின் (AISC) கீழ் செயல்படும் 'என்கேஜ் ஸ்போர்ட்ஸ் அரேனா' சார்பில் பேட்மிண்டன் பிரீமியர் லீக் (BPL) போட்டி அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. என்கேஜ் அரேனாவின் ஜமால் பக்கர் இப்போட்டியின் மேலாளராக இருந்து சிறப்பாக வழிநடத்தினார். மொத்தம் 4 அணிகளைச் சேர்ந்த 80 வீரர்கள் இந்தத் தொடரில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்தத் தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், 'ஆல்பா மெட்டல்ஸ்' நிறுவனத்தின் நிறுவனருமான முகம்மது ஷாலிக்குச் சொந்தமான 'பேட்மிண்டன் வாரியர்ஸ்' (Badmin Warriors) அணி தொடக்கம் முதலே அபாரமாக விளையாடியது. லீக் சுற்றுகளில் தோல்வியே சந்திக்காமல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்த அணி, பரபரப்பான இறுதிப் போட்டியில் 105-80 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

அணியின் கேப்டன் சல்மான், துணை கேப்டன் சியாம்லால் மற்றும் மேலாளர் இராமநாதபுரம் கான் முகமது ஆகியோரின் சிறப்பான திட்டமிடலும், வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டமும் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
வெற்றி குறித்துப் பேசிய முகம்மது ஷாலி, "தொழில் ரீதியாக எனக்கு எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், பேட்மிண்டன் விளையாடுவதையும், திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதையும் நான் மிகவும் நேசிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான போட்டிப் பதிவுக் கட்டணம், பயிற்சி கட்டணம், விளையாட்டுச் சீருடை, பரிசுத் தொகை மற்றும் போட்டி நாட்களில் உணவு வசதி என அனைத்தையும் முகம்மது ஷாலி தனது சொந்தச் செலவில் இலவசமாக வழங்கி வருகிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான பேட்மிண்டன் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க அவர் முடிவு செய்துள்ளார். துபாய் மண்ணில் தமிழ்நாட்டு வீரர்களின் திறமை மிளிர வேண்டும் என்ற நோக்கில், தகுதியான வீரர்கள் www.badminwarriors.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த அணியில் இணைய விரும்பும் வீரர்கள் 050 628 2427 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். வெளிநாட்டு மண்ணில் தமிழர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கும் முகம்மது ஷாலியின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
