Delimitation எல்லாமே சுமுகம்.. இரண்டு வருடம் தான் டார்க்கெட்.. 2029ல் பாஜக வைத்துள்ள பெரிய திட்டம்
டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உடன் நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தயாராகி வருகிறது. வரும் டிசம்பர் 1ம் தேதி இது நிறைவேற இருப்பதால் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக மாறப்போகிறது. அதேநேரம் மசோதா நிறைவேறிய உடன், வேலைகளை தொடங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் அனைத்தையும் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வகையில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் அதிகரிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதனுடன், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 'நாரி சக்தி வந்தன்' சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தின் 132-வது திருத்த மசோதா, 2026-க்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா, 2026-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இரண்டாவது மசோதாவில் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சிறப்புப் பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
அதன் 10-வது பிரிவின்படி, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் மக்களவையில் ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையும், ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையும் 50 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும்.இதன் மூலம் மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 550-லிருந்து 850 ஆக உயரும் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள் 850 தொகுதிகள் எவை, எவை, மகளிருக்கான தொகுதிகள் எவை எவை, எம்எல்ஏக்கள் தொகுதி அதிகரிப்பு உள்பட முன்மொழியப்பட்ட அனைத்து வேலைகளையும். இரண்டு ஆண்டு காலக்கெடுவுக்குள் முடிவுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தப் பணிகளை முடிப்பதே அரசின் இலக்கு என்று மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன. ஆனால் இது மிகவும் சவாலானதாகவும், கடினமானதாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் வெறும் இரண்டு ஆண்டுகளில் அனைத்தையும் முடிப்பது ஒருபுறம் எனில், மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்த வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான பணிகளை அரசு செய்து முடிக்க வேண்டியதிருக்கும்.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. தற்போது மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு, 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதத்தின் அடிப்படையில் இருக்கிறது.
இந்தத் தொகுதி ஒதுக்கீடும், தொகுதிகளின் மறுசீரமைப்பும் 2051-ஆம் ஆண்டு வரை மாற்றப்படாமல் நிலைநிறுத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், தற்போது நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் தொகுதி மறுவரையறையை இணைக்காமல் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. எனவே தான் 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியும் என்று மத்திய அரசு
இதுகுறித்து ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்ட செய்திகளின் படி, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சிகளுடனும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெறும்" என்றார்கள்.
மேலும், 2026 டிசம்பர் 1-ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நீண்ட நேரம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதற்காக 5 முதல் 6 மணி நேரம் வரை ஒதுக்கப்படலாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Click it and Unblock the Notifications
