சட்டமன்ற தொகுதிகளும் 50% அதிகரிக்கும்! ஒரே நாடு ஒரே தேர்தல்? 3 ஆண்டில் கலைக்கப்படுமா விஜய் ஆட்சி?
சென்னை:ல மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 132-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா எனப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மசோதாவில் மக்களவைத் தொகுதிகள் மட்டுமல்லாமல், மாநில சட்டமன்றத் தொகுதிகளையும் 50 சதவீதம் உயர்த்துவதற்கான முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது: இந்த மசோதா வழிவகுக்கும் மாற்றங்களால், 2029-ம் ஆண்டிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு வந்து, தமிழகத்தில் ஆளும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 3 ஆண்டுகளிலேயே தேர்தலைச் சந்திக்க நேரிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டமன்றத் தொகுதிகளில் என்ன மாற்றம் வருகிறது?
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மசோதா நகலின்படி, மக்களவை இடங்கள் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களின் மொத்த இடங்களும் 50 சதவீதம் உயர்த்தப்பட உள்ளன.
இதன் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தற்போதைய 234 தொகுதிகள் சுமார் 351 தொகுதிகளாக அதிகரிக்கும். புதிய தொகுதிகளோடு சேர்த்து, சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
2029-ல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' சாத்தியமா?
2026-ம் ஆண்டில் தமிழக சட்டமன்றம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தவெக தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. வழக்கமான நடைமுறைப்படி இந்த அரசின் பதவிக்காலம் 2031-ம் ஆண்டு வரை உள்ளது.
ஆனால், டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் கணிப்புகளின்படி, தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறியதும் அடுத்தகட்டமாக பாஜக அரசு *ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைத் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.
1. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (JPC) சிக்னல்: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி, அரசியல் ரீதியான ஒருமித்த கருத்து ஏற்பட்டால், 2029 பொதுத் தேர்தலிலேயே நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
2. புதிய தொகுதிகளுக்கான தேர்தல்: 2029 பொதுத் தேர்தலுக்கு முன்பாக மக்களவைத் தொகுதிகள் 50% உயர்த்தப்பட்டு, பெண்கள் இடஒதுக்கீடும் அமலுக்கு வரும்போது, அதே நேரத்தில் உயர்த்தப்பட்ட புதிய சட்டமன்றத் தொகுதிகளுக்கும் (351 இடங்கள்) சேர்த்துத் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிடலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதாவது புதிய தொகுதிகள் இருப்பதால் மொத்தமாக எல்லா மாநிலங்களுக்கும் புதிய தேர்தல் நடத்த வேண்டும்.
தவெக ஆட்சி 3 ஆண்டுகளில் முடிவுக்கு வருமா?
ஒருவேளை 2029-ம் ஆண்டில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்டம் அமல்படுத்தப்பட்டு, அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டால், 2026-ல் ஆட்சிக்கு வந்த தவெக அரசு வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த சூழல் உருவாகலாம்.
அதே நேரத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களின் 5 ஆண்டுப் பதவிக்காலத்தைக் குறைத்து 2029-ல் தேர்தல் நடத்துவது அரசியலமைப்புச் சட்டப்படி எளிதல்ல.. அதற்கு மாநிலங்களின் ஆதரவும், கூடுதல் சட்டத் திருத்தங்களும் தேவை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எது எப்படியோ, இன்று திமுக எடுத்த இந்த ஒற்றை முடிவு.. மக்களவைத் தொகுதிகளை மட்டுமல்லாமல், தமிழக சட்டமன்றத் தொகுதிகளையும் 351 ஆக உயர்த்தி, 2029-ம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது என்பது மட்டும் உறுதி!


Click it and Unblock the Notifications
