திருப்பரங்குன்றம் to கள்ளக்குறிச்சி..கைவிடப்பட்ட IAS-கள்! தவெக அரசுக்கு எதிராக திரும்பும் ஐஏஎஸ் லாபி
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், மாநில நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழும் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்திற்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரை உச்ச நீதிமன்றத்தில் தனிமரமாகத் தவிக்கவிட்டதும், பெண் ஆட்சியருக்குத் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ பாலியல் தொல்லை கொடுத்த விவகாரமும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. திருப்பரங்குன்றம் வழக்கில் 'பலி ஆடாக்கப்பட்ட' மதுரை கலெக்டர்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவை 'பலி ஆடாக்கி' விட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஆளுங்கட்சியின் அறிவுறுத்தல்படி செயல்பட்ட மாவட்ட ஆட்சியரைக் காப்பாற்ற அரசுத் தரப்பு முன்வரவில்லை. மாறாக, தீபம் ஏற்ற வேண்டியது ஆட்சியரின் பொறுப்புதான் என்பது போலக் கைவிரித்ததால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கடும் கோபத்திற்கும், நீங்கள் செய்தது அரசியலமைப்புச் சீர்குலைவு என்ற கடுமையான கண்டனத்திற்கும் ஆட்சியர் ஆளானார்.
அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் நீதிமன்றத்தில் ஆட்சியர் திணறியதோடு, மன்னிப்பு கேட்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டார்.
இப்போது, தலைமைச் செயலாளர் சாய் குமார் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொந்தத் தொலைபேசி அழைப்பு விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்களின் தவறான முடிவுகளுக்காக நேர்மையான அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், பணிப் பாதுகாப்பையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குமுறுகின்றனர்.
2. கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு நேர்ந்த அவலமும், தாமதமான நடவடிக்கையும்
மறுபுறம், பெண் ஆட்சியருக்கு, ஆளுங்கட்சியான தவெக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் ஐஏஎஸ் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு மாவட்டத்தின் உயர்மட்ட நிர்வாகியான பெண் ஆட்சியருக்கே ஆளுங்கட்சி எம்எல்ஏவால் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் உருவானது. ஆரம்பத்தில் இந்தப் புகாரை மூடிமறைக்கவும், சமரசம் செய்யவும் சில அமைச்சர்களும், ஆளுங்கட்சித் தரப்பினரும் அழுத்தம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டுக் கண்டித்த பிறகும், தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தலைமைச் செயலாளரிடம் நேரடியாகப் புகார் அளித்து கடும் அழுத்தம் கொடுத்த பிறகே, நேற்றிரவு எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
மாநில நிர்வாகத்திற்குப் பேராபத்து!
அடுத்தடுத்து நடந்துள்ள இந்த இரண்டு சம்பவங்களும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் ஆளுங்கட்சி மீதான நம்பிக்கையை முற்றிலுமாகச் சிதைத்துள்ளது. ஆபத்து என்றால் அரசு நம்மைக் கைவிட்டுவிடும்; அரசியல்வாதிகள் தப்பித்துக்கொண்டு அதிகாரிகளைப் பலி கொடுப்பார்கள் என்ற எண்ணம் அதிகாரிகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
இதன் காரணமாக, வரும் நாட்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவெக அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கவோ அல்லது விதிகளைக் காரணம் காட்டி அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தாமல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடவோ அதிக வாய்ப்புள்ளது.
அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இணைந்து செயல்பட்டால்தான் ஒரு மாநிலம் முன்னேற முடியும். அதிகாரிகள் வட்டாரம் அரசுக்கு எதிராகத் திரும்பினால், அது ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் நிர்வாகத்திற்கும், சாமானிய மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பையே ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications
