ஆ.ராசா 7.18% கணக்கு.. 39 தமிழக MP தொகுதிகளுக்கு ஆபத்தா? 50 ஆண்டு வரலாறு.. யாரந்த சேலம் திமுக தலைவர்?
சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவப் பங்கு 7.18 சதவீதமாக உள்ளது என்று திமுக எம்.பி. ஆ.ராசா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் இந்தப் பங்கு 7.21 சதவீதமாக உயரும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஆனால், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்ற கவலை இன்று எழுந்தது மட்டுமல்ல, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே இதே கேள்வி நாடாளுமன்றத்தில் எழுந்திருக்கிறது.
மக்கள் தொகை அதிகமாக இருந்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டுமா? மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அதனால் பாதிப்பு வரலாமா? இந்தக் கேள்விகள் இப்போது எழுந்தவை அல்ல. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதம் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஏன் இவ்வளவு முக்கியமாக பார்க்கப்படுகிறது? இதற்குப் பின்னால் இருக்கும் வரலாற்றைப் பார்ப்போம்.
1972-லேயே எழுந்த கேள்வி
1972-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றுவது குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே விவாதம் நடந்தது.
அப்போது சேலம் தொகுதியின் திமுக எம்.பி.யாக இருந்த ஈ.ஆர். கிருஷ்ணன் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு, அதற்காக நாடாளுமன்றத்தில் கிடைக்கும் தொகுதிகள் குறைந்துவிடக் கூடாது என்பதுதான் அவரது கருத்து.
மத்திய அரசு ஒருபக்கம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், அந்த திட்டங்களை செயல்படுத்தும் மாநிலங்களுக்கே மக்களவையில் கிடைக்கும் பிரதிநிதித்துவம் குறைந்தால் அது எப்படி நியாயமாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்களவை, சட்டமன்ற தொகுதிகளை வரையறுக்கும்போது 1961-க்கு முந்தைய கணக்கெடுப்பு அடிப்படையையே பின்பற்ற வேண்டும் என்றும் கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில், மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை... பிரதமர் இந்திரா காந்தியுடன் நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்குப் பிறகு, மக்களவையின் மொத்த இடங்களை 570 ஆக உயர்த்தும் யோசனைக்கும் திமுக ஆதரவு தெரிவித்திருந்தது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் திமுக வலியுறுத்தியது.
1973-ல் அதிகரித்த தொகுதிகள்
1972-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் 1973-ல் தொகுதி மறுவரையறை பணிகள் நடந்தன. அப்போது மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு தலா 3 தொகுதிகள் அதிகரித்தன. குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தலா 2 தொகுதிகள் கூடின.
ஆந்திரப் பிரதேசம், பீகார், ஹரியானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் கிடைத்தன. ஆனால், தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் 39 ஆகவே நீடித்தது.
மற்ற மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்தபோது தமிழ்நாட்டின் எண்ணிக்கை மட்டும் மாறவேயில்லை... மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுமோ என்ற கவலை அப்போது எழுந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.
தொகுதி மறுவரையறை நிறுத்தம்
அடுத்ததாக, 1976-ம் ஆண்டு ஒரு முக்கியமான மாற்றம் வந்தது. அப்போது பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, 42-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது.
இதன்படி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும், மாநிலங்களுக்குள் இருக்கும் தொகுதி எல்லைகளையும் மாற்றாமல் அப்படியே வைத்திருக்க முடிவு செய்தார்கள். 2000-ம் ஆண்டுக்கு பிறகு வெளியாகும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் கிடைக்கும் வரை இதே நிலை தொடரும் என்றும் அறிவித்தார்கள்.
இதற்கு பின்னாலிருநத முக்கியமான காரணம் என்னவென்றால், குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைத்த மாநிலங்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதுதான்... அதனால்தான் 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது.
2003-ல் வந்த மாற்றம்
2001-ம் ஆண்டு 84-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையே மக்களவைத் தொகுதிகளைப் பிரிப்பதற்கான 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையிலான நடைமுறை, 2026-க்குப் பிறகு வெளியாகும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, 2002-ம் ஆண்டு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 87-வது சட்டத் திருத்தத்தின்படி, ஒரு மாநிலத்துக்குள் தொகுதிகளின் எல்லைகளை மாற்றுவதற்கு 1991-ம் ஆண்டு கணக்கெடுப்புக்குப் பதிலாக 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பு விவரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இங்கே ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்... மாநிலங்களுக்கு எத்தனை எம்பி தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பே இப்போதும் அடிப்படையாக இருக்கிறது. ஆனால், ஒரு மாநிலத்துக்குள் ஊர், பகுதி வாரியாக தொகுதிகளின் எல்லைகளை மாற்றுவதற்கு 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டது.
1971 கணக்கெடுப்பு
இப்போது மீண்டும் தொகுதி எல்லைகளை மாற்றுவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது.. தமிழ்நாடு போல மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்கள், அதற்காக நாடாளுமன்றத்தில் தங்களுக்குக் கிடைக்கும் தொகுதிகளை இழந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த விவாதத்தின் முக்கியக் கேள்வி.
1971-ம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு 39 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 39 தொகுதிகளும் குறையக் கூடாது என்பதுதான் இப்போது முன்வைக்கப்படும் முக்கியமான கோரிக்கை.
ஆனால், மாநிலத்துக்குக் கிடைக்கும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பது ஒரு பக்கம் என்றால், அந்த மாநிலத்துக்குள்ளேயே தொகுதிகளை எப்படிப் பிரிப்பது என்பது இன்னொரு பக்கம்.
மொத்தம் 39 தொகுதிகள்
அதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் அப்படியே இருந்தாலும், எதிர்காலத்தில் தொகுதி எல்லைகளை மாற்றும்போது எந்தெந்த ஊர்களுக்கும், பகுதிகளுக்கும் என்ன பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வியும் இருக்கிறது.
1972-ல் நாடாளுமன்றத்தில் எழுந்த மக்கள் தொகை, தொகுதி எண்ணிக்கை தொடர்பான கவலை இப்போது மீண்டும் பேசப்படுகிறது. 1971-ம் ஆண்டு கணக்கெடுப்பு ஏன் இப்போதும் முக்கியமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பழைய வரலாறு உதவுகிறது...!!


Click it and Unblock the Notifications
