மதுரைக்கு மத்திய அரசு 2 குட்நியூஸ்.. தர்மபுரி - கரூர் - திண்டுக்கல் - மதுரை சாலை 6 வழிச்சாலையாகிறது
தர்மபுரி: தமிழகத்தில் 339 கிலோ மீட்டர் நீளமுள்ள 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 44-ல் தர்மபுரி - கரூர் - திண்டுக்கல் - மதுரை சமயநல்லூர் இடையிலான சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலை '744-ஏ'யில் மதுரை ரிங் ரோடு 2-ம் கட்டமாக தாமரைப்பட்டி முதல் டி.புதுப்பட்டி வரையிலான பகுதி 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதற்காக மொத்தம் 339 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 44-ல் தர்மபுரி - கரூர் - திண்டுக்கல் - மதுரை சமயநல்லூர் இடையிலான சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலை '744-ஏ'யில் மதுரை ரிங் ரோடு 2-ம் கட்டமாக தாமரைப்பட்டி முதல் டி.புதுப்பட்டி வரையிலான பகுதி 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட இருக்கிறது.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், பொருளாதார மற்றும் நிதி ஆதாயங்கள் குறித்து ஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளத. இதற்காக ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்பட உள்ளது. சாலை அகலப்படுத்துதல், பாலங்கள் கட்டுதல் அல்லது விரிவாக்கம் செய்தல், சர்வீஸ் சாலைகள் அமைத்தல், சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஆலோசனை நிறுவனம் வழங்க உள்ளது.
அதேபோல் தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ள சாலை விரிவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் மற்றும் ஊர்களில் புறவழிச்சாலைகள் அமைப்பதற்கான மாற்று வழித்தடங்களும் ஆய்வு செய்யப்பட இருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் நிலப்பரப்பு அளவீடு, மண் பரிசோதனை, சாலை மேற்பரப்பு, பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் குறித்த ஆய்வுகளும் நடத்தப்படும். அதனடிப்படையில் பொறியியல் வடிவமைப்புகள் மற்றும் வரைபடங்கள் போன்ற ஆலோசனை நிறுவனத்தால் திட்டமிட்டு வடிவமைக்கப்படும்.
சாலை விரிவாக்கத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல், மின்கம்பங்கள் உள்ளிட்ட சேவை கட்டமைப்புகளை மாற்றுதல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறுதல் தொடர்பான பணிகளும் திட்ட அறிக்கையில் இடம்பெற இருக்கிறது. திட்டத்துக்கான மொத்த செலவு மதிப்பீடு, பொருளாதார மற்றும் நிதி சாத்தியக்கூறு, சுங்கக் கட்டண வசூல் திட்டம் ஆகியவையும் தயாரிக்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் நிறைவேறினால், தர்மபுரி - கரூர் - திண்டுக்கல் - மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என கூறப்படுகிறது.




Click it and Unblock the Notifications
