அரசியல் சூழ்ச்சியால் இருளில் மூழ்கியிருந்த திருப்பரங்குன்றம் தீபத்தூண்! நயினாரின் ஹேப்பி போஸ்ட்
சென்னை: சில அரசியல் சூழ்ச்சிகளால் இத்தனை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று பேரொளி வீசப்படவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் அகல் விளக்கை ஏற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மத்தையும் தெய்வீகத்தையும் கொண்டாடும் வகையில் நமது இல்லங்களை இன்று அகல் விளக்குகளால் அலங்கரிப்போம்!

முழுமுதற் கடவுளான எம்பெருமான் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள தீபத்தூணில், திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற லட்சக்கணக்கான முருக பக்தர்களின் வாழ்நாள் கனவையும் வழிபாட்டு உரிமையையும் சட்டத்துடன் துணையுடன் நாம் மீட்டெடுத்துள்ளோம்!
சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக திருப்பரங்குன்ற மலையை 'சிக்கந்தர் மலை'யாக மாற்றி, இந்துக்களின் மத அடையாளங்களை அழிக்க முயன்ற அரசியல் தீயசக்திகளின் கூட்டுச்சதியை தர்மத்தின் துணையுடன் நாம் முறியடித்துள்ளோம்!
ஆம், பாரம்பரிய வழக்கத்தின்படி, திருப்பரங்குன்றத் திருக்கோயிலுக்குச் சொந்தமான தீபத்தூணில் இந்த வருடம் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என 2026 நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மதிக்காமல், முருக பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திய தவெக அரசின் ஆணவத்தை அழித்து, இன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் ஜெகஜோதியாக ஒளிரப்போகிறது கார்த்திகை தீபம்!
இன்று திருப்பரங்குன்றத் தீபத்தூணில் ஒளிரப்போவது வெறும் தீபமல்ல; முருக பக்தர்களின் வெற்றிச் சுடர்! ஆன்மீகத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு!
எனவே, சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளால் இத்தனை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த தீபத்தூண் பிரகாசிக்கப் போவதை கொண்டாடும் விதமாகவும், இரும்புக்கரம் கொண்டு நீதியை நிலைநாட்டிய நீதித்துறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இன்று மாலை நமது இல்லங்களில் மாக்கோலம் இட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவோம்!
திருப்பரங்குன்றம் மலையில் இன்று ஒளிரப் போகும் கார்த்திகை தீபத்தின் பேரொளி, உலகெங்கிலும் வாழும் முருக பக்தர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிரப்பட்டும்!வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! இவ்வாறு தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதனால் கார்த்திகை தீபத்தன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் கடந்த 24 ஆம் தேதி கார்த்திகை தீபத்தின் போது தீபத்தூணில் விளக்கேற்றாமல் பாரம்பரிய இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் விளக்கேற்றப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக இந்து அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தனர். அந்த வழக்கு கடந்த இரு தினங்களாக விசாரிக்கப்பட்டது.
தீபத்தூணில் தீபம் ஏற்றாததற்கு மாவட்ட ஆட்சியர் மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில் இன்று தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது.
மேலும் அறங்காவலர் குழுவை கலைத்துவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை கோயில் நிர்வாக பொறுப்பாளர்களாகவும் நியமித்தது. இதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன. தீபத்தூணை சுற்றி மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு கோயில் நிர்வாகிகள், சிஆர்பிஎஃப் படையினர், 50 பொதுமக்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என சொல்லப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு தீபமேற்றப்படும் நிலையில் தற்போது நீதியரசர்கள் மலை உச்சிக்கு செல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
