பாஜக அரசின் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் கொடுத்த விளக்கம் இதுதான்!
சென்னை: மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய பாஜக அரசு திருத்தங்களை மேற்கொண்டு அறிமுகப்படுத்தும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் இரண்டு கோரிக்கைகளும், பாஜக அரசால் எழுத்துப்பூர்வமாக புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இன்று நடந்த எம்.பி.க்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த, அக்கட்சியின் எம்.பி தயாநிதி மாறன், "தமிழ்நாடும் பிற தென்னிந்திய மாநிலங்களும் குடும்பக் கட்டுப்பாட்டு முறை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மிகவும் பொறுப்புடன் கடைப்பிடித்துள்ளன.
எனவேதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக நாங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் வாதம். திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எங்கள் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது போல, திமுக நியாயமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறது.
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றின் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடாது. அதேசமயம், குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றாத உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில், அதிகாரச் சமநிலையைப் பாதிக்கும் வகையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது.
திமுக முன்வைத்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான இடங்களின் விகிதாச்சாரம் மாறாமல், தற்போதைய நிலையே நீடிக்கிறது.
மேலும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரவிருப்பது ஒரு சாதகமான அம்சம்; இதை திமுக ஆதரிக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தியாவில் முதன்முதலில் நடைமுறைப்படுத்திய கட்சி திமுகதான். நாங்கள் எப்போதும் இதை ஆதரித்து வந்திருப்பதால், இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
