திருப்பரங்குன்றத்தில் திடீர் பரபரப்பு! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கொந்தளித்த இந்து அமைப்பினர்!
மதுரை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது, கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் வழிகாட்டுதல் குழுவில் உள்ள மாவட்ட ஆட்சியர், தீபம் ஏற்றப்படும் தூணை நோக்கி சென்ற போது, அவருக்கு எதிராக இந்து அமைப்பினர் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைத்து ராம ரவிக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ராம ரவிக்குமார் கோரிய தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

ஆனால், அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதி மறுத்துவிட்டது. மட்டுமல்லாது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்யப்பட்டது. 2 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், நவ.20ம் தேதி நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவில், சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும்.. இருப்பினும் ஒரு முறை மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தது. ஆனால், தவெக தலைமையிலான அரசு தீபம் ஏற்றவில்லை. கோயில் நிர்வாகத்தை காரணம் காட்டி.. மாவட்ட ஆட்சியர் தீபம் ஏற்றவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்து அமைப்புகள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை தொடுத்தன.
இந்த வழக்கு விசாரணையில், கட்டாயமாக ராம ரவிக்குமார் கோரிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கொடுத்த இடைக்கால தடை நீக்கப்படுவதாகவும் உத்தரவிட்டது.
இப்படியாக தற்போது தர்காவுக்கு அருகில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன், வைத்தியநாதன் தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு வந்திருக்கின்றனர்.
தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ்-ம் இடம் பெற்றிருந்தார். அவர் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல முயன்றபோது.. இந்துத்துவா அமைப்பினர் அவரை போக விடாமல் தடுத்ததால்.. சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
