திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றப்பட்டது.. முதல்முறையாக தீபத்தை ஏற்றியது யார்?
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் பட்டர்கள் வசந்த், விவேக் ஆகியோர் தீபம் ஏற்றி உள்ளனர். திருப்பரங்குன்றம் மலை ஏறுவதற்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் வழக்கம் போல் உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றப்பட்டது. இதனால் கோபம் அடைந்த உச்சநீதிமன்றம், இன்று மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் கோயிலுன் அறங்காவலர் குழுவையு கலைத்து, கோயில் நிர்வாக பொறுப்பை மேற்கொள்ள முன்னாள் நீதிபதிகளான வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரை நியமனம் செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதலே திருப்பரங்குன்றம் பகுதி சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. அதேபோல் தீபத்தை காண மதியம் முதலே இந்து அமைப்பினர், பாஜகவினர் குவிந்தனர். ஆயிரக்கணக்கானோர் திருப்பரங்குன்றம் பகுதியில் குவிந்த நிலையில், பதற்றமான சூழல் நிலவியது. இதனால் மலைக்கு செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் கோயில் நிர்வாகிகள், இந்து அமைப்புகளைச் சேர்ந்த 10 பேர், சிஆர்பிஎஃப் வீரர்கள், பட்டர்கள் ஆகியோர் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் பட்டர்கள் விவேக், வசந்த் ஆகியோர் தீபம் ஏற்றினர்.
திருப்பரங்குன்றம் மலை உள்ள தூணில் முதல்முறையாக தீபம் ஏற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு படி தூணில் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த தீபத்தை காண கோயில் பகுதியில் மட்டுமல்லாமல், அப்பகுதியில் வீடுகளில் உள்ள மாடிகளிலும் பக்தர்கள் குவிந்தனர். திருப்பரங்குன்ற மலை தூணில் தீபம் ஏற்றப்பட்டது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
