திருப்பரங்குன்ற மலை தூணில் தீபம் ஏற்றிய நொடி முதல்.. தொடர்ச்சியாக 13 நிமிடங்களுக்கு வெடித்த பட்டாசு!
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் முதல்முறையாக தீபம் ஏற்றப்பட்ட நொடி முதல் தொடர்ச்சியாக 13 நிமிடங்களுக்கு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. மலை மீது ஏற 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட சூழலில், கோயிலுக்கு முன் நின்ற இந்து அமைப்புகள் பட்டாசுகளை வெடித்து உற்சாகம் அடைந்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மதுரை திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது. காலையிலேயே திருப்பரங்குன்றம் பகுதி சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோல் தர்காவுக்கு செல்லும் இஸ்லாமியர்கள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் மலை மேல் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அங்கு தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படாததால் பக்தர்கள், இந்து அமைப்புகள் என்று யாரையும் அனுமதிக்கவில்லை. கடைசியாக 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, கோயில் நிர்வாகிகள், நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்டோர் என்று மொத்தமாக 50 பேர் மட்டும் மலை ஏறினர். அதிலும் நீதிபதி பார்த்திபனால் மலையேற முடியாததால், அவரை சிஆர்பிஎஃப் வீரர்கள் தூக்கி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்ற அமைக்கப்பட்ட மேடையில் ஏறி நீதிபதிகள் நின்றனர். அப்போது தீபம் ஏற்றப்பட்ட நொடி தொடங்கி தொடர்ச்சியாக சுமார் 13 நிமிடங்களுக்கு வாண வேடிக்கை உள்ளிட்ட பல்வேறு பட்டாசுகளை வெடித்து பக்தர்கள் கொண்டாடினார்கள்.
அரோகரோ கோஷமும், பாரத் மாதா ஜி ஜே கோஷமும் திருப்பரங்குன்றம் பகுதியில் அதிர வைத்தது. அதேபோல் இந்து அமைப்பினர் பலரும் காவி கொடி மற்றும் காவி ஆடை அணிந்து அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மலை மீது ஏற்றப்பட்ட தீபத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
