164 ஆண்டுகால சர்ச்சை கடந்து திருப்பரங்குன்றம் கல் தூணில் ஏற்றப்பட்ட தீபம்.. இதுவரை நடந்தது என்ன?
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று தீபம் ஏற்றப்பட்டது. 1862 ஆம் ஆண்டு முதல், சுமார் 164 ஆண்டுகளாக இதுதொடர்பான வழக்குகள் இருந்து வந்த நிலையில், தற்போது, அந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, இந்த விவகாரத்தில் வந்த நீதிமன்ற உத்தரவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனை இன்று நேற்று எழுந்தது அல்ல. 164 ஆண்டுகளைக் கடந்து இந்த விவகாரம் நீண்ட சிக்கலில் இருந்து வருகிறது. தர்காவுக்கு அருகில் உள்ள இடம் என்பதால், அங்கு தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அது தீபத் தூணா, சர்வே கல்லா என்பதிலும் விவாதங்கள் நடைபெற்று வந்தன.

1862 முதல்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக 1862 மற்றும் 1912-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட முயற்சிகள், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாரம்பரிய வழக்கம் காரணமாக அதிகாரிகளால் தடுக்கப்பட்டன. 1920-இல் கோயில் தேவஸ்தானம் மலை முழுவதும் தங்களுக்குச் சொந்தமானது என வழக்குத் தொடர்ந்தது.
1923 பிரிவி கவுன்சில் தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலையின் உரிமை மற்றும் எல்லைகள் தொடர்பாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிவி கவுன்சில் (Privy Council) வழங்கிய தீர்ப்பில், மலைப்பகுதி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தர்கா அமைந்துள்ள இடம், நெல்லித்தோப்பு மற்றும் தர்கா செல்லும் படிகள் முஸ்லிம் தரப்புக்கு உரியவை என்றும் தீர்ப்பளித்தது.
1996 உயர் நீதிமன்ற உத்தரவு
1994 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 21.11.1996 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார். மலையின் பெரும்பகுதிக்கு உரிமையாளரான திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் மட்டுமே கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
வழக்கமான பாரம்பரிய இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், வேறு எந்தத் தனிநபரோ அல்லது அமைப்போ மலையின் வேறு பகுதிகளில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கியமான நிபந்தனை
எதிர்காலத்தில் மலையின் வேறு ஏதேனும் ஒரு இடத்தில் தீபம் ஏற்ற தேவஸ்தானம் விரும்பினால், அதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும். அவ்வாறு மாற்று இடத்தைத் தேர்வு செய்யும்போது, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா, தர்காவிற்குச் செல்லும் படிக்கட்டுகள் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளிலிருந்து குறைந்தபட்சம் 15 மீட்டர் தள்ளியிருக்கும் இடத்தை மட்டுமே தேவஸ்தானம் தேர்வு செய்ய வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.
2014 தீர்ப்பு
2014 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரித் தொடரப்பட்ட இரண்டு முக்கிய ரிட் மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து, பாரம்பரிய இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த இரு வெவ்வேறு இரு நீதிபதிகள் அமர்வுகளும், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீடுகளைத் தள்ளுபடி செய்து 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டன.
தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
2025 ஆம் ஆண்டு இராம. இரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
தீபத்தூணில் விளக்கேற்றுவதால் அருகில் உள்ள சிக்கந்தர் தர்காவின் உரிமைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் காட்டி பக்த்ர்களின் மத வழிபாட்டு உரிமையைத் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு
கார்த்திகை தீபத் திருநாளான 2025 டிசம்பர் 3 ஆம் தேதி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படாததைத் தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மனுதாரர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) பாதுகாப்புடன் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆட்சியர் பிறப்பித்த 163 தடை உத்தரவு ரத்து
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 163-வது பிரிவு தடை உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். மேலும், தனி நீதிபதியின் அவமதிப்பு உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தர்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து தள்ளுபடி செய்தது.
முக்கிய நிபந்தனைகள்
தீபத்தூண் அமைந்துள்ள பகுதி கோயிலுக்குச் சொந்தமானது என உறுதி செய்த நீதிமன்றம், பொதுமக்கள் அடிவாரத்திலேயே இருக்க வேண்டும் என்றும், கோயில் தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறை, தொல்லியல் துறை அனுமதியுடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மலை உச்சிக்குச் சென்று கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
உயர் நீதிமன்றத்தின் 06.01.2026 தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, கோயில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.
நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இருதரப்பு வாதங்களையும் விசாரித்து கடந்த 20 ஆம் தேதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24 அன்று ஒருமுறை மட்டும் தற்காலிகமாக தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு
நவம்பர் 20 உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டதாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், மதுரையில் "நிர்வாகச் சீர்கேடு" நிலவுவதாகவும், அதிகாரிகள் அரசியல் உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்பட்டதாகத் தோன்றுவதாகவும் கடுமையாக விமர்சித்தது.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்த உச்ச நீதிமன்றம், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தது. மேலும், நவம்பர் 28 அன்று மத்தியப் படை (CRPF) பாதுகாப்போடு தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.
ஏற்றப்பட்டது தீபம்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இன்று (நவம்பர் 28) மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், கோயில் அர்ச்சகர்கள் தீபத்தை ஏற்றினர்.
164 ஆண்டுகால சிக்கல்களுக்கு இடையே, இன்று கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையிலும், அமைதியான முறையில் இன்று தீபம் ஏற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
