கண்ணை மூடி வைகோ செய்த செயல்.. மேகதாது அணை கட்டிட்டால் பஞ்சப் பிரதேசமாகிடுமே தஞ்சாவூர்?
தஞ்சாவூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இதற்கு மத்திய அரசும் மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதைக் கண்டித்து தஞ்சாவூரில் வைகோ தலைமையில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வைகோ, மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து ஆவேசமாகப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது: "சிதம்பரத்தை தாண்டி, புவனகிரியை கடந்து, வெயிலை தாங்க முடியாமல், மயக்கம் வந்து, சாலை ஓரத்தில் ஒன்றரை மணி நேரம் படுத்து கிடந்து, பின் பம்புசெட்டு கிணற்றருகே 2 மணி நேரம் தூங்கி, மீண்டும் நடந்து நான் வந்த பயணம் தான் இந்த காவிரிக்கான பயணம்.

பம்புசெட்டு கிணற்றருகே
நிழலுக்கு ஒதுங்கி நிற்கிற தோழர்களே, வேகாத வெயிலிலே உழைக்கிற விவசாயியை நினைத்தீர்களா? வேகாத வீதியிலே தன் உடம்பை கரிக்கட்டையாக்கிக் கொண்ட அந்த விவசாயியைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்தீர்களா?
யாரும் உன்னோடு வராவிட்டாலும் நீ கவலைப்படாதே, யார் வராட்டி என்ன? நீ தனியாக போ, Go Alone என்று இந்திரா காந்தி மொழிபெயர்த்த ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை போல, அந்த சித்தாந்தத்தை கொண்டவன் நான்.
தஞ்சை தரணி, பஞ்ச பிரதேசமாகிறது
இந்த தஞ்சை தரணி, பஞ்ச பிரதேசமாக போகிறது. அவன் அணை கட்டுவது உறுதி. மேட்டூருக்கு சொட்டு தண்ணீர் வராது. பஞ்சமும், பசியும், பட்டினியும் உங்களை வாட்டி வதைக்கும். உங்கள் பிள்ளைகளை வாட்டி வதைக்கும். எத்தியோப்பியாவின் பிள்ளைகளைப் போல எலும்பும் தோலுமாக உங்கள் பேரப் பிள்ளைகள் இருப்பார்கள். இதுதான் தமிழ்நாட்டில் நடக்கப் போகிறது.
இதை எதிர்த்துதான் 14 வருடங்களுக்கு முன்பு 12000 பேரை திரட்டிக்கொண்டு கிருஷ்ணகிரியில் போய் நான் போராட்டம் நடத்தினேன். இந்து ஆங்கில ஏடு தமிழ்நாட்டுக்கு யாரும் செய்யாத சேவையை செய்தது. அந்த ஏடு 2016 டிசம்பர் 7, 8 தேதிகளில் வெளியிட்டது,
கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் வீட்டில் ஒரு சதி ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் எல்லா கட்சி கர்நாடக எம்.பி.க்கள், மந்திரிகள் கலந்து கொண்டார்கள். சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.
அதில் என்ன சொன்னார்கள் தெரியுமா? நாங்கள் வெளிப்படையாக மேகதாது அணை கட்ட அனுமதி கொடுக்க மாட்டோம். கொடுத்தால் தமிழ்நாட்டில் கிளர்ச்சி வரும். ஆனால் நீங்கள் அணையை கட்டிக் கொள்ளுங்கள். இப்பொழுது இருந்தே அதற்கு தேவையான சிமெண்ட், பொருட்களை ஆயத்தப்படுத்துங்கள். இப்பொழுதே 5900 கோடி முதலில் ஒதுக்கீடு செய்யுங்கள். பிறகு 9500 கோடி இரண்டு வருடம் கழித்து ஒதுக்கீடு செய்யுங்கள். அணையை கட்டுங்கள் என்று சொன்னார்கள்.
நயவஞ்சகத்தை ஏன் மோடி செய்தார்?
இந்த நயவஞ்சகத்தை ஏன் மோடி செய்தார்? கர்நாடக மாநிலத்தில் பி.ஜே.பி.யை காலூன்றச் செய்வதற்காக, நிரந்தரமாக கர்நாடக மாநிலத்தில் பி.ஜே.பி.யை நிலைநாட்டுவதற்காக மோடி இந்த துரோகத்தை திட்டமிட்டு செய்கிறார். அவர்கள் அணை கட்ட ஆரம்பிப்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குள் வருகிற தண்ணீரையும் எல்லா இடங்களிலும் தடுக்க திட்டமிட்டு விட்டார்கள். நமக்கு இருக்கக்கூடிய நீராதாரங்களையும் தடுக்க திட்டமிட்டு விட்டார்கள்.
நாங்கள் மூவேந்தர் பரம்பரை. மூன்று கடல்களை ஆண்டவர்கள். கீழ்த்திசை நாடுகளை எல்லாம் ஜெயித்தவர்கள் இந்த சோழ மண்டலத்து வீரர்கள். இது சோழ மண்டலம், ஆசியாவின் நெல் களஞ்சியம். அது இன்று போய்விட்டது. எல்லாம் பழங்காலம் ஆகிவிட்டது. இப்பொழுது நம் எதிர்காலம் சூனியமாகிவிட்டது. இப்பொழுது நாம் போராடாவிட்டால் என்ன ஆகும்?
கர்நாடகத்துக்காரன் பயப்பட மாட்டான்.
கர்நாடகத்துக்காரன் பயப்பட மாட்டான். டெல்லிக்காரனுக்கு பயம் வர வேண்டும். நாளைக்கு தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டு டெல்லியை விட்டே உடைத்துக்கொண்டு போறோம்டா என்று தமிழர்கள் திரள்வார்கள்.
இந்த மண்ணின் மக்களுக்காக வாழ்கிறேன். செந்தமிழ் நாட்டை, பொன்னியின் செல்வனை எப்போது படித்தேனோ அன்றிலிருந்து இந்த செந்தமிழ் நாட்டை நான் காதலிக்கிறேன். இந்த மண்ணை காதலிக்கிறேன்.
பகுத்தறிவாதியான நான் இன்று போய் பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு போய், மூலஸ்தானத்துக்கு போய், இடுப்பில் பட்டுத்துண்டை கட்டிக்கொண்டு கும்பிட்டேன். அது ராஜ ராஜ சோழன் கட்டிய கோயில்டா.
அந்த கோயிலில் போய் கும்பிடும் போது நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று வாழ்த்திவிட்டு, தேவாரமும் திருவாசகமும் நமது சொத்துக்கள் என்று பாடிவிட்டு வந்தேன். பெரியாரைப் பற்றியும் பேசுவேன். முக்கண் முதல்வனைப் பற்றியும் பேசுவேன். இவன் தான் வைகோ" என்றெல்லாம் உணர்ச்சிகரமாக பேசினார்.
பெருவுடையாரிடம் வேண்டுதல்
முன்னதாக, தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அங்குள்ள கருவறை முன்பு நின்று கைகூப்பி, கண்களை மூடி பெருவுடையாரிடம் உணர்ச்சிபூர்வமாக வேண்டினார்.
அப்போது காவிரி பிரச்சனையை பெருவுடையாரிடம் முறையிட்ட அவர், கர்நாடக அரசு ஏற்கெனவே காவிரியின் குறுக்கே 4 அணைகளைக் கட்டியுள்ள நிலையில், தற்போது 5வது அணையைக் கட்ட முயற்சி செய்கிறது.. மத்திய அரசும் கர்நாடகாவில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மறைமுகமாக அணை கட்ட ஆதரவு அளிக்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் எதிர்காலத்தில் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும், டெல்டா தனி பிரதேசமாக தொடர்ந்து விளங்க வேண்டும்" என்றெல்லாம் வேண்டிக்கொண்டார்.


Click it and Unblock the Notifications
