திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் வயதான பக்தர்கள் இனி 30 நிமிடங்களில் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியவர்கள் விரைந்து ஏழுமலையானை பிரார்த்தனை செய்ய ஏதுவாக இருக்கும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். விடுமுறை நாட்கள் என்றால் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
இதனால் தரிசனத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரமும் அதிகரிக்கும். ஏழுமலையானை இலவச தரிசனம், டோக்கனுடன் கூடிய இலவச தரிசனம், திவ்ய தரிசனம், ரூ 300 சிறப்பு தரிசனம், ரூ 500 சிறப்பு தரிசனம், சேவாக்கள் உள்ளிட்டவை மூலம் தரிசனம் செய்யலாம். அது போல் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயுடையவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு சுபதத்தில் உள்ள வழியில் சுவாமி தரிசனம் செய்ய தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இநத நிலையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 30 நிமிடங்களில் சுவாமி தரிசனம் செய்யும் திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர் எப்படி தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம். அதாவது 65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயது சான்றை கவுன்ட்டர் எஸ்-1 இல் காட்ட வேண்டும். பின்னர் கோயிலில் வலது சுவரையொட்டி பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்ல வேண்டும். இங்கு படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால் எளிதாக நடந்து செல்லலாம். தரிசன வரிசைக்கு சென்றதும் 30 நிமிடங்களில் சுவாமி பார்த்துவிடலாம். தரிசனத்திற்கு பிறகு முதியோர்களுக்கு இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம், பல் ஆகியவை வழங்கப்படும். மேலும் பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கவுன்ட்டர்களுக்கும் அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் அழைத்து செல்லப்படுவர். ஏற்கெனவே உள்ள முறையிலும் எளிதாகவே சுவாமி தரிசனம் செய்யும் நிலையில் தற்போது புதிய முறையால் இன்னும் எளிதாக முதியவர்களை சுவாமி தரிசனம் செய்யலாம்.