திருப்பதி: திருமலை திருப்பதியில் 116 வயது மூதாட்டி ஒருவர், நடைபாதையில் 3550 படிக்கட்டுகளில் ஏறிச் சென்று ஏழுமலையானை தரிசித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அது போல் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். திருப்பதிக்கு பேருந்து, ரயில், விமானம் மூலம் வந்து அங்கிருந்து திருமலை செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து ஏழுமலையான் கோயிலுக்கு செல்லலாம். இந்த மலை பாதையில் இரு சக்கர வாகனங்கள், கார்களுக்கும் அனுமதி உண்டு. ஆனால் இரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 3 மணி வரை இந்த பாதையில் வாகனங்களில் பயணிக்க அனுமதி இல்லை. அது போல் கீழ் திருப்பதிக்கு வந்துவிட்டால் ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல இரு நடைபாதைகள் உள்ளன. ஒன்று அலிபிரி நடைபாதை, மற்றொன்று ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை. இந்த அலிபிரி செக்போஸ்டை தாண்டிதான் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்லும். அங்கு ஒரு பகுதியில் நடைபாதைக்கான படிக்கட்டுகள் உள்ளன. 11 கி.மீ.தூரம் கொண்டது. இது 3,550 படிக்கட்டுகள் ஆகும். காளி கோபுரம் என்ற இடத்தில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இங்கு காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பகல் 2 மணிக்கு மேல் வரும் பக்தர்கள் வனவிலங்கு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு குழுக்களாக அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பாதையை 3 முதல் 5 மணி நேரத்தில் ஏறிவிடலாம். அது போல் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் தொடங்குகிறது. 2.1 கி.மீ. தூரம், 2388 படிகளை கொண்டது. தினமும் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதை ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரத்தில் கடந்துவிடலாம். இங்கு 1200 ஆவது படியில் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இந்த டோக்கன்களை கொண்டு இலவச தரிசனம், ரூ 300 தரிசனத்தைவிட நடைபாதை தரிசன பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யலாம். இரு நடைபாதைகளிலும் நிழலுக்காக ஷீட் போடப்பட்டுள்ளது. சிறிய கடைகள், கழிப்பறைகள், உணவு விடுதிகள் உள்ளன. படிகள் சற்று நெட்டாக இருக்கும். முடிந்தவர்கள் இந்த மலை பாதைகளை தேர்வு செய்வர். வேண்டுதல் இருப்பவர்களும் இதை பயன்படுத்திக் கொள்வார்கள். தரிசன டிக்கெட் கிடைக்காதவர்கள்,இந்த திவ்ய தரிசன நடைபாதையை பயன்படுத்திக் கொள்வதுண்டு. இந்த நிலையில் 116 வயது மூதாட்டி ஒருவர் அலிபிரி நடைபாதையில் 3550 படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரது புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அந்த மூதாட்டிக்கு பெருமாள் மீது அதிக பக்தி. இந்த தள்ளாடும் வயதிலும் தனது குடும்பத்தினரின் உதவியுடன் நடைபயணமாக மலைபாதையில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் ஏறி சென்று திருமலையை அடைந்தார். அங்கிருந்து திவ்ய தரிசனத்திற்கான வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். தனது 116 வயதையும் பொருட்படுத்தாமல் திருமலை படிக்கடிகளில் மூதாட்டி ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தது சமூகவலைதளங்களில் வைரலானது.