ஒரே ஒரு டிக்கெட்டை வைத்து திருப்பதி ஏழுமலையானை 4 முறை தரிசிக்கலாமே! இன்று காலை 10 மணிக்கு ரெடியா?

  • திருப்பதி: ஒரே ஒரு டிக்கெட்டை வைத்துக் கொண்டு திருமலை திருப்பதி ஏழுமலையானை 4 முறை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த சேவைக்கு பெயர் பவித்ரோத்ஸசவம் என்று பெயர். இந்த சேவை குறித்த தகவல்களை பார்க்கலாம்.

    Advertisement

    திருமலை திருப்பதியில் பல்வேறு சேவாக்கள் நடந்து வரும் நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் வருடாந்திர ஆர்ஜித சேவைதான் பவித்ரோத்ஸசவம்.

    Advertisement

    இந்த சேவை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் (ஆகஸ்ட்) ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகளில் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு பவித்ரோஸ்தசவ சேவா ஆகஸ்ட் மாதம் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் நடைபெறும்.

    ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை திருமலையில் மேற்கு மாட வீதியில் இருக்கும் வசந்த மண்டபத்தில் பவித்ரோஸ்சவ சேவாவை முன்னிட்டு அங்குரார்ப்பணம் நடைபெறும். 3 நாட்கள் நடைபெறும் இந்த சேவாக்கான டிக்கெட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்திலோ அல்லது செயலியிலோ புக் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்.

    Advertisement

    இந்த சேவைக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான ஸ்ரீவாரி ஆர்ஜித சேவாக்களான கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுடன் வெளியாகும்.

    இந்த வழிபாடுகளின் போது, தெரிந்தும் தெரியாமலும் அர்ச்சகர்களாலோ, ஊழியர்களாலோ அல்லது பக்தர்களாலோ ஏதேனும் குறைகள், தவறுகள் அல்லது தீட்டுகள் (Ritual imperfections) ஏற்பட்டிருக்கலாம்.

    புனிதப்படுத்துதல்: அவ்வாறு ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்து, மூலவர் மற்றும் கோவில் வளாகத்தின் புனிதத்தன்மையை மீண்டும் புதுப்பிப்பதற்காக நடத்தப்படும் ஒரு உன்னதமான 'சுத்தி பூஜை' (Purification Ritual) தான் இந்த பவித்ரோத்சவம் ஆகும்.

    Advertisement

    முதல் நாள் பவித்ர பிரதட்சிணை, 2ஆம் நாள் பவித்ர சமர்ப்பணம், 3ஆவது நாள் பவித்ர பூர்ணாஹூதியும் நடைபெறும். இந்த பூஜையில் பயன்படுத்தப்படும் பவித்ர மாலைகள் சுத்தமான நூலால் தயாரிக்கப்பட்டவை.

    இந்த மாலை தயாரிப்பதற்கான பருத்திச் செடிகளை திருமலை திருப்பதியின் தோட்டக் கலைத் துறை பிரத்யேகமாக வளர்க்கிறது. இந்த மாலையை 5 வண்ண நூல்களால் தயாரிப்பார்கள். இந்த 3 நாட்களும் திருமலை கோயிலில் உள்ள கல்யாணோத்சவம் மண்டபத்தில் காலை நேரத்தில் நடக்கும். 3 நாட்களும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த சேவையில் 4 முறை ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அதிலும் துவார பாலகர்கள் இருக்கும் இடம் வரை சுவாமியை பார்க்கலாம். ஆனால் குலசேகர படி வரை செல்ல முடியாது. உற்சவத்தின் 3 நாட்களும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு 3ஆவது நாள் உற்சவம் முடிந்த பிறகும் ஒரு முறை சுவாமி தரிசனம் செய்ய முடியும்.

    Advertisement

    இந்த 4 முறையும் சுபதம் வழியாக விரைவான தரிசனத்தை பார்க்கலாம். இந்த பூஜையின் போது ஆண்களுக்கு பவித்ர மாலையும் வஸ்திரமும் வழங்கப்படும். பெண்களுக்கு பவித்ர மாலையும் ரவிக்கை துண்டும் கொடுப்பார்கள்.

    3 நாட்கள் சேவை முடிந்ததும் பவித்ரோஸ்தசவம் டிக்கெட்டை காட்டி ஒரு லட்டை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். லாகின் ஐடியில் இருந்து அதிகபட்சமாக 2 தரிசன டிக்கெட்டுகளை புக் செய்யலாம். 12 வயதுக்குள்பட்டவர்களுக்கு இலவசம். அவர்களுக்கான ஆதார் அட்டையை அங்கிருப்பவர்களிடம் காட்டிவிட்டு செல்லலாம்.

    இந்த சேவையை புக் செய்வோருக்கு ராம் பகீசா அல்லது வராக சுவாமி கெஸ்ட் ஹவுஸில் 3 நாட்களுக்கும் அறை கொடுத்துவிடுவார்கள். ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம், 3 நாட்களுக்கு 300 ரூபாயும் டெபாசிட் (திருப்பி கொடுக்கும் வகையிலானது) ரூ 500 சேர்த்து ரூ 800 கட்டணம் செலுத்த வேண்டும்.

    Advertisement

    இந்த அறையை நாம் ஆன்லைனில் புக் செய்ய முடியாது, தேவஸ்தான அலுவலகத்திற்கு (CRO Office) நேரில் சென்றுதான் புக் செய்ய வேண்டும். ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிஆர்ஓ அலுவலகத்தில் உள்ள டோனார் கவுன்ட்டரில் போய் அறையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு செல்போன் ஐடியில் இருந்து 2 பேருக்கு புக் செய்திருந்தால் மட்டுமே அறை கொடுப்பார்கள், ஒருத்தருக்கு என்றால் கொடுக்க மாட்டார்கள். இந்த சேவைக்கு மொத்தம் 250 டிக்கெட்டுகளை ஒதுக்குவார்கள். ஒரு டிக்கெட்டின் விலை ரூ 2500.

    இந்த சேவையை புக் செய்ய ஆகஸ்ட் 23 ஆம் தேதியான முதல் நாள் மட்டுமே பச்சை நிறத்தில் டிக்கெட் இருப்பது காட்டும். அந்த ஒரு நாளைக்கு புக் செய்தாலே 3 நாட்களுக்கும் சேர்த்து புக்காகிவிடும்.

    இந்த பவித்ரோஸ்தசவம் டிக்கெட் புக் செய்ய மற்ற சேவாக்களில் கலந்து கொண்டு தரிசனம் செய்த நாளில் இருந்து 180 நாட்கள் (புக் செய்த நாளில் இருந்து இல்லை) ஆகியிருந்தால் மட்டுமே புக் செய்ய முடியும். இந்த 3 நாட்களும் தெற்கு மாட வீதியில் இருக்கும் சுபதம் நுழைவு வாயிலில் காலை 7 மணிக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். இந்த சேவையில் ஆண்கள் வேட்டியிலும் பெண்கள் சேலை அல்லது சுடிதாரில் இருக்கலாம். இந்த பவித்ரோஸ்சவத்திற்கு செல்லும் போது உங்கள் டிக்கெட்டை 4 காப்பிகள் நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    முதல் நகலை அறை புக் செய்ய பயன்படுத்த வேண்டும். 2ஆவது நகலை சுபதத்தில் கொடுக்கும் போது சீலிட்டு கையெழுத்து போட்டு தருவார்கள். அந்த காப்பியை பத்திரமாக வைத்துக் கொண்டால்தான் அடுத்த 2 நாட்களுக்கு பூஜையில் கலந்து கொள்ள முடியும். கையெழுத்திடப்பட்ட டிக்கெட்டை தொலைத்துவிட்டால் வேறு காப்பியை காட்டினாலும் தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

    English Summary

    Bookings for the special Pavithrotsavam seva at Tirumala Venkateswara Temple begin today at 10 AM. Devotees can avail the unique opportunity to have four darshans of Lord Venkateswara using a single ticket during the sacred festival service.