இந்த வார ராசி பலன் : மே 20, 2022 முதல் மே 26, 2022 வரை
சென்னை: மே மாதத்தின் நான்காவது வாரத்தில் திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷ ராசி ராகு...ரிஷப ராசியில் சூரியன், புதன்...துலா ராசியில் கேது... கும்பத்தில் சனி... மீனத்தில் செவ்வாய், குரு, சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. 23 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். மற்ற கிரகங்களில் மாறுதல் இல்லை.
சந்திரன் இந்த வாரம் மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரைய செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்
சூரியன் - ரிஷப ராசி
செவ்வாய் - மீன ராசி
புதன் - ரிஷபம்
குரு - மீன ராசி
சுக்கிரன். - மீன ராசி 23 ஆம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு செல்கிறார்.
சனி - கும்பம் ராசி
ராகு. - மேஷ ராசி
கேது - துலாம் ராசி

மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டிய வாய்ப்பு வரும். தவறவிடாதீர்கள். உடன் வேலை செய்பவருக்கு சம்பளம் அதிகமாக இருக்கிறது என்று அவசரப்பட்டு வேலையை உதறி விடாதீர்கள். செவ்வாய் விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கூடவே குருவும் சுக்கிரனும். பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் பாதகத்தை செய்வார். இருந்தாலும் குருவுக்கு பயந்து அது சிறிய அளவில் நடக்கும். எந்தக் காரணம் கொண்டும் வெளிப் பெண்களிடம் நெருக்கமாகப் பழகாதீர்கள். அது வில்லங்கத்தில் கொண்டு போய்விடும். இரண்டாமிடத்தில் சூரியனோடு அமர்ந்திருக்கிற புதன் அரசாங்க வேலையை வாங்கித் தருவார். மிக நுட்பமாக சில காரியங்களைச் செய்வீர்கள் குருபகவானின் சுபப் பார்வையால் தடைப்பட்டு நின்ற வீட்டு வேலைகள் மளமளவென்று நடக்கும். லாப ஸ்தானத்தில் சனி பகவான் வலுவாக அமர்ந்திருக்கிறார். இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் அமோகமாக நடக்கும். நீண்டகாலமாக துன்பப்படுத்தி வந்த மூட்டு வலிக்குத் தீர்வு கிடைக்கும். நகைச்சுவையாக பேசுகிறோம் என்ற பெயரில் மனைவியின் மனதைக் காயப்படுத்தாதீர்கள். ஒன்றாம் இடத்தில் இருக்கும் ராகு பிரச்சனையை உண்டு பண்ணுவார். ஏழாம் இடத்தில் இருக்கும் கேது உறவினர்கள் வகையில் செலவுகளைக் கொண்டுவருவார். மங்கல நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.

ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....சூரிய பகவான் உங்கள் ராசியிலேயே இருக்கிறார். கையில் இருக்கும் பணத்தை பையில் வைக்கும்போது கூட கவனமாக இருக்க வேண்டும். மன நிம்மதி வேண்டும் என்பதற்காக மதுவின் பக்கம் சென்று விடாதீர்கள். லாபஸ்தானத்தில் செவ்வாய், குரு, சுக்கிரன் இணைந்து இருக்கிறார்கள். 23ஆம் தேதி சுக்கிரன் மேஷத்திற்கு இடம் மாறுகிறார். அலுவலகத்தில் இதுவரை நீங்கள் அனுபவித்த அல்லல்கள் மறைந்து போகும். உங்களை மட்டம் தட்டியவர்கள் தேடி வந்து உங்களிடம் உதவியை எதிர்பார்ப்பார்கள். நண்பர்களின் உதவியால் பங்குப் பரிவர்த்தனையில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த இடமாறுதல் இப்போது உங்களுக்கு கிடைக்கும். குறுக்கு வழியில் வேலை தேட முயற்சி செய்யாதீர்கள். சொந்த வீடு இல்லையே என்று நொந்து போயிருந்த உங்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வலுவாக இருக்கிறார். எந்த தொழிலில் இறங்கினாலும் வெற்றி பெறுவீர்கள். மருத்துவர்கள், பொறியியலாளர்கள், எலெக்ட்ரிசியன்கள், கொத்தனார்கள் அதிக வருமானம் பெறுவார்கள். ராகு 12-ஆம் இடத்தில் இருக்கிறார். ஆன்மீகப் பெரியோர்களின் ஆதரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். கோவில் திருப்பணிகளுக்கு உதவியாக இருப்பீர்கள். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார். நீண்டகாலமாகத் தொந்தரவு தந்த எதிர்ப்புகள் விலகிப் போகும்.

மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். வள்ளலைப் போல் வாக்குறுதிகளை அள்ளி வழங்காதீர்கள். அல்லல்பட வைத்து அலைக்கழிக்கும். பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கிறார் புதன். தாய்மாமன் உறவில் விரிசல் உண்டாகும். அனாவசியமாக யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள் சுகமான பலன்களைக் கொடுப்பார்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். பங்குச் சந்தை ஏற்றம் தரும். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆதாயம் பெறுவீர்கள். பணியாளர்களின் வேலைத் திறனைப் பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். என்றோ வாங்கிப்போட்ட நிலம் இன்று அதிக விலைக்கு விற்கும். சிறு தொழில் செய்பவர்களுக்கும் இது சிறப்பான காலக்கட்டம். புதிய தொழில் தொடங்க வெளிநாட்டு உதவி கிடைக்கும். வங்கியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். 11 ஆம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். சிலர் காதலித்த பெண்ணையே கைபிடித்து களிப்படைவார்கள். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். வெளிவட்டாரப் பழக்கங்களில் எச்சரிக்கை தேவை. தந்தையாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பதினோராம் வீட்டில் இருக்கும் ராகு பண வரவுகளை அதிகப்படுத்துவார். மற்றவர்களுக்கு செய்யும் உதவியால் உங்கள் செல்வாக்கு உயரும். கேது 5-ஆம் இடத்தில். பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். 20,21 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம்.

கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசி அன்பர்களே...
சூரியன் உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்தில் இருக்கிறார். கோட்சாரப்படி யோகமான பலன்களை தருவார். சுப காரியங்களில் தடைகள் விலகி சொந்தங்கள் கூடி வருவார்கள். சந்திரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக தான் இருக்கிறது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை இருந்த தடைகள் விலகும். பிள்ளைகளிடம் அதிகாரம் காட்டாமல் அன்பாக இருங்கள். செவ்வாய், குரு, சுக்கிரன் 3 கிரகங்களும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கின்றன. வீடு மனைகளை புதுப்பிக்கவோ புதிதாக வாங்கவோ வாய்ப்பு கிடைக்கும். சட்டச் சிக்கலில் இருந்த நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் முடிவுக்கு வரும். பங்குச்சந்தை வர்த்தகங்கள் ஏற்றமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காணப்படும். குருமங்கள யோகம் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். 9 10-ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலர் சீட்டு கட்டி நகை வாங்கி நீண்டநாள் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். சனி பகவான் 8-ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படலாம். ரத்த காயங்கள் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். 10-ஆம் இடத்தில் ராகு அமர்ந்து இருக்கிறார். பணவரவை அதிகபடுத்துவதுவார். கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவீர்கள். ராகு 4-ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.22,23,24 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம்.

சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
உங்களுடைய ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். ஆசைப்பட்ட வேலை அமையவில்லையே என்று ஆதங்கப்பட்ட உங்களுக்கு நல்ல செய்தி வரும். தொழிலை நிலை நிறுத்தி முக்கிய இடத்தைப் பிடிப்பீர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள் பதவி உயர்வு அடைவார்கள். புதன் 10-ம் இடத்தில் இருக்கிறார். புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பீர்கள். ஊழியர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற சன்மானம் பெறுவார்கள். குருவும் செவ்வாயும் சுக்கிரனும் எட்டாம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அகலக்கால் வைக்க வேண்டாம். தொழில் எதிரிகளை சாமர்த்தியமாக எதிர்கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உருவாகும். அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு அவசர முடிவு எடுக்காதீர்கள். நடைபெறவிருந்த திருமணம் தடை பட்டுப் போக வாய்ப்பு உண்டு. உறவினர்களே உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். சுக்கிரன் 9-ம் இடத்திற்கு வரும்போது பலன்கள் மாறும். கலைப் பொருட்கள் வியாபாரம் கணிசமான லாபத்தைக் கொடுக்கும். 8 ஆம் இடத்தில் சனி. குடும்பத்தில் குழப்பம் விளையும். விட்டுக்கொடுத்துப் போங்கள். கெட்டுப் போக மாட்டீர்கள். வர்த்தக ஒப்பந்தங்களில் கவனமாகப் படித்து கையெழுத்துப் போடுங்கள். வேலையிடத்தில் வெட்டிப்பேச்சு பேசாதீர்கள். எதிர்காலம் குறித்து தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வீர்கள். 25,26 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம்.

கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
சூரியன் 9 ஆமிடத்தில் இருக்கிறார். பாக்கியஸ்தானம் சூரியனுக்கு பாதகமான இடம். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். பெண்களிடம் தள்ளியே இருங்கள். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார். நீங்கள் பெரிதும் நம்புகின்ற நபரே உங்களை ஏமாற்றலாம். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் அதிகாரத்தைக் காட்ட வேண்டாம். செய்யாத தவறுக்காக பழி உங்களைத் தேடி வரலாம். பாக்கிய ஸ்தானத்தில் புதன். எடுக்கின்ற முயற்சிகள் எந்த வகையிலும் வெற்றி பெறும். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபம் பார்ப்பீர்கள். குரு ஏழாமிடத்தில் இருக்கிறார். சுக்கிரனும் இணைந்திருக்கிறார். பங்குச் சந்தை வர்த்தகம் பரபரப்பாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களில் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். கலைப் பொருட்கள் விற்பனையில் கணிசமான லாபம் பெறுவீர்கள். ஐடி ஊழியர்கள் அபாரமாக திறமையை வெளிப்படுத்துவார்கள். சனிபகவான் ஆறாமிடத்தில் இருக்கிறார். கூட இருந்து குழி பறிப்பவர்களை அடையாளம் கண்டு அழிப்பீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி தொழில் ஏற்றம் பெறும். ராகு எட்டாம் இடத்தில் இருக்கிறார். கணவன்-மனைவிக்கிடையே கசப்புணர்வு தோன்றும். மூன்றாம் மனிதர்களின் பேச்சைக் கேட்டு மோதல் அதிகரிக்கும். அனுசரித்துப் போனால் அவஸ்தை இருக்காது. கேது இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பணவரவை தாமதப்படுத்துவார்.

துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன் இருக்கிறார். உங்கள் பெயரை கெடுக்க ஒரு கும்பல் வேலை செய்யும் சாமர்த்தியமாக அதை சமாளிப்பீர்கள்.நீங்கள் நல்லதையே சொன்னாலும் மற்றவர்கள் தப்பாக புரிந்து கொள்வார்கள் ஆகவே தேவையில்லாத விஷயத்தில் பஞ்சாயத்து பண்ணாதீர்கள். ஆறாம் இடத்தில் செவ்வாய் தொழிலில் அபார வளர்ச்சி பெறுவீர்கள் வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்து வீர்கள் வசீகரமான பேச்சால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள் சுக்கிரன் ஆறிலிருந்து ஏழு மாறுகிறார்ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு என்பதை உணர்வீர்கள் சபலப்பட்டு சங்கடப் படாதீர்கள். நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லையே என்ற கவலை நீங்கும் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள் குருவும் செவ்வாயும் ஆறாம் இடத்தில் இருக்கிறார்கள் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சேர்ப்பீர்கள் வியாபாரம் சீராக நடக்கும் கட்டுமானத்துறையில் அபார வளர்ச்சி ஏற்படும் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும் சனி ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள் வெளியூர் பயணங்களால் அதிக நன்மை கிடைக்காது ஏழாமிடத்தில் ராகு இருக்கிறார் மருத்துவச் செலவுகள் வரலாம் ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள் ராகு ஒன்றாம் இடத்தில் இருக்கிறார் நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும்

விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருக்கிறார். கோச்சாரப்படி சிறப்பான இடம் அல்ல. கூடப் பிறந்தவர்களால் பணம் விரயம் உண்டாகும். உறவுகளை விட்டு விலகிப் போகும் நிலை ஏற்படும். சந்திரனின் நகர்வுகள் ஏற்ற இறக்கமான பலன்களையே தரும். ஐந்தாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். பூர்வீக நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விட்டுக் கொடுத்துப் செல்லுங்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். புதன் ஏழாம் இடத்தில் இருக்கிறார். எந்த காரியத்தையும் மனத் துணிவோடு செய்வீர்கள். தொழில் போட்டிகளை துடைத்து எறிவீர்கள். ஆன்லைன் வியாபாரம் அவ்வளவு சாதகமாக அமையாது. குரு பகவான் 5-ஆம் இடத்தில் இருக்கிறார். சுக்கிரனும் 5-6 என்ற இடங்களில் சஞ்சரிக்கிறார். கல்யாணம் நடக்கவில்லையே என்ற கவலை மாறும். சனி நான்காம் வீட்டில் இருக்கிறார். ஏண்டா வீட்டிற்கு வருகிறோம் என்ற மன நிலையை ஏற்படுத்துவார். வேலையிடத்தில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களை கவனமுடன் செலுத்த வேண்டும். ஆறாமிடத்தில் ராகு வந்திருக்கிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைப்பார். பெரிய மனிதர்களின் பழக்கம் ஏற்படும். அதனால் நன்மை உண்டாகும். 12ஆம் இடத்தில் கேது அமர்ந்திருக்கிறார். குடும்பத்தினருடன் தல யாத்திரை செல்வீர்கள்.

தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
சூரியன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். நேற்று வரை உங்களை ஒழித்துக்கட்ட நினைத்தவர்கள் இன்று ஓடி வந்து உதவி செய்வார்கள். தொழிலுக்கு தேவையான அத்தனை வசதிகளும் தானாக வந்து சேரும். செவ்வாய் நான்காம் இடத்தில் இருக்கிறார். பெற்றோர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். கூட்டாகச் செய்கின்ற வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும். 6-ஆம் இடத்தில் இருக்கும் புதன் அனுகூலமான பலனைத் தருவார். புத்திசாலித்தனத்தால் புகழைச் சேர்ப்பீர்கள். ஆராய்ச்சித் துறையில் பாராட்டைப் பெறுவீர்கள். சந்திர பகவான் அனுக்கிரகத்தால் சங்கடங்கள் விலகும். குரு பகவான் நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அரசுப்பணியாளர்கள் அதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். சுப காரியங்களில் சுருக்கமாக செலவு செய்யுங்கள். வெட்டிப் பந்தாவுக்கும் வீண் ஆடம்பரத்திற்கும் ஆசைப்படாதீர்கள். உங்கள் முயற்சிக்கு ஏற்ப தொழில் உயரும். பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். சனி பகவான் 3-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்களை கலங்கவைத்த எதிரிகளை கலங்கடிப்பீர்கள்.

மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
சூரியன் நான்காம் வீட்டில் இருக்கிறார். புதனும் அவரோடு சேர்ந்து இருக்கிறார்.
மனைவி மக்கள் மூலமாக மகிழ்ச்சி அடைவீர்கள். தூரதேச பிரயாணங்கள் நல்ல பலனைத் தரும். சந்திரபகவான் இடமாறுதல் சாதகமான நிலையை ஏற்படுத்தும். கஷ்டங்கள் நீங்கி உங்களுடைய இஷ்டங்கள் நிறைவேறும். விஜய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் சிலர் கசப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அது மறைந்து போகும். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்லாதீர்கள். புதன் ஐந்தாம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அரசாங்கத் தேர்வு எழுதுகின்றவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குரு பகவான் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் பக்கபலமாக திகழ்வார்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக நடக்கும். சகோதரி வீட்டில் இருந்த பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். சனிபகவான் 2-ம் இடத்தில் இருக்கிறார். துரத்தி வந்த துன்பங்களை விரட்டி அடிப்பீர்கள். அரசு ஒப்பந்தக்காரர்கள் அதிக லாபம் பெறுவார்கள். தொழில் மேன்மையாக நடக்கும். வெளியூர் பயணங்களால் குடும்பத்தைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். கேது பத்தாம் இடத்தில் இருக்கிறார். இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவடைந்தது மனநிம்மதியை ஏற்படுத்தும். நில விற்பனையில் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். அதை வீணாக்காமல் நகைகள் வாங்குவீர்கள். எதிர்கால சேமிப்பாக மாற்றுவீர்கள்.

கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
சூரியன் நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். வேலையிடத்தில் வெற்றிகரமாக திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் மனம் போல் பணி மாற்றம் ஏற்படும்.உங்களுக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டுபிடித்து விலக்கி வைக்க வேண்டும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார். குருபகவானும் இணைந்திருக்கிறார். குரு மங்கள யோகம் என்ற அற்புதமான அம்சத்தில் உள்ளனர். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவடையும். முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றமாக நடக்கும். அயல்நாட்டு வர்த்தகங்களில் நம்பிக்கை ஒளி பிறக்கும். வியாபாரம் அதிகரித்து லாபம் படிப்படியாக உயரும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். அறிவுத் திறமையை அதிகாரிகள் பாராட்டுவார்கள். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார். இதயம் இதயம் கலந்து இரண்டு உயிர் ஒன்றாகும். காதல் கனிந்து வரும். உங்கள் ராசியில் சனி அமர்ந்திருக்கிறார். உறவுகளில் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாம். உங்கள் பேச்சை புரிந்து கொள்ளாமல் இல்லத்தரசிகள் மனவருத்தம் அடைவார்கள். கொடுத்த கடனைத் திருப்பி கேட்டால் உறவுக்குள் பகைவரும். ராகு பகவான் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். ஆன்லைன் வர்த்தகங்கள் சீராக நடக்கும். வியாபாரம் விருத்தியாகும். தடைகள் விலகிப்போகும். கேது ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளி வட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாக கொண்ட மீனராசி அன்பர்களே....
சூரியன் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். உங்கள் பொறுப்பை நீங்களே ஏற்று செய்யுங்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமாக அது அமையும். செவ்வாய் ராசியிலேயே அமர்ந்திருக்கிறார். நில விற்பனையில் எதிர்பார்த்த லாபம் பார்ப்பீர்கள். வீடு கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள். சகோதர உறவுகளில் இருந்த சங்கடங்கள் விலகி போகும். புதன் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். அரசுத்துறையில் அபாரமான சாதனையைச் செய்வீர்கள். ஆசிரியர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடையும். ஆராய்ச்சித் துறையில் டாக்டர் பட்டம் பெறுவீர்கள். குரு பகவான் சொந்த வீட்டில் இருக்கிறார். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவரும். உங்களின் வாக்குத் திறமையால் வியாபாரத்திற்கு தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகத் தொகையை போடவேண்டாம். சுக்கிரன் ராசியிலும் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். ஆடல் பாடல் போன்றவற்றில் மாணவர்கள் அற்புத சாதனை படைப்பார்கள். அழகு நிலையம் நடத்துகிறவர்கள் அதிக லாபம் அடைவார்கள். சனி பகவான் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஐடி துறை ஊழியர்கள் அதிக நேரம் கண் விழித்து வேலை பார்ப்பார்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். வெளியிட கோபங்களை வீட்டுக்குள் காட்டாதீர்கள். மனநிம்மதியை பறித்துவிடும்.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ. பெர்னாட்ஷா, காரைக்குடி.