ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!
சென்னை: "எப்போ வரும்... எப்படி வரும்?" எனப் பலகாலமாக காத்திருந்த கோவை - திருச்சி பயணிகளுக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு அதிரடி 'கிஃப்ட்' கொடுத்திருக்கிறது. கோவை - திருச்சி - கரூர்... இந்த முக்கோணப் பயணத்தை இனி ஒரு 'ஜாலி ரைடாக' மாற்றப்போகிறது அந்த 230 கி.மீ நீளப் புதிய பசுமை வழிச்சாலை!

230 கிலோமீட்டர்... 4 வழிச்சாலை... ரெடியான டெண்டர்!
தற்போதுள்ள கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்குத் தெரியும், வாகன நெரிசலும் சிக்னல்களும் படுத்தும் பாடு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான், கரூர் வழியாக கோவையையும் திருச்சியையும் இணைக்கும் பிரம்மாண்ட பசுமை வழிச்சாலை (Greenfield Highway) திட்டத்தை NHAI கையில் எடுத்திருக்கிறது.
இந்தத் திட்டத்துக்கான முதற்கட்ட வேலையாக, விரிவான திட்ட அறிக்கை (DPR - Detailed Project Report) தயாரிப்பதற்கான கன்சல்டன்ட்டுகளை நியமிக்க தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. சுமார் 230 கி.மீ தொலைவுக்கு அமையவிருக்கும் இந்தப் புதிய சாலை, ஏற்கனவே இருக்கும் சாலைகளைப் பயன்படுத்தாமல் முற்றிலும் புதிய வழித்தடத்தில் (Alignment) அமையப்போவதுதான் இதன் ஸ்பெஷல்.
இந்த 230 கி.மீ பசுமை வழிச்சாலையானது கோயம்புத்தூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மூன்று முக்கிய தொழில் நகரங்களை இணைக்கும் ஒரு 'மெகா காரிடாராக' அமையவுள்ளது. கோயம்புத்தூரின் கிழக்குப்பகுதிகளில் தொடங்கி, சூலூர் வழியாகப் பயணித்து, பல்லடம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளைத் தொட்டுச் செல்லும் வகையில் இதன் வரைபடம் திட்டமிடப்படலாம்.
அங்கிருந்து கரூரின் ஜவுளி மையங்களை இணைத்து, குளித்தலை வழியாக திருச்சியின் மேற்கு நுழைவு வாயிலை வந்தடையும் வகையில் இந்த வழித்தடம் அமைய வாய்ப்புள்ளது. முக்கியமாக, ஏற்கனவே உள்ள நெரிசல் மிகுந்த பழைய தேசிய நெடுஞ்சாலையை (NH 81) தொடாமல், விளைநிலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவான 'பசுமை' பகுதிகள் வழியாகப் புதிய சாலை அமைக்கப்படுவதால், இந்த மூன்று மாவட்டங்களின் புறநகர் பகுதிகளும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த புதிய சாலை?
பயண நேரம் குறையும்: ஊருக்குள் நுழையாமல் பைபாஸ் வழியாகவே பறக்கலாம் என்பதால், கோவை - திருச்சி இடையேயான பயண நேரம் பாதியாகக் குறைய வாய்ப்புள்ளது.
தொழில் வளர்ச்சி: கரூரின் ஜவுளித் தொழில், திருச்சியின் இன்ஜினியரிங் நிறுவனங்கள் மற்றும் கோவையின் சிறு, குறு தொழில்களை இணைக்கும் ஒரு 'எகனாமிக் காரிடாராக' இது மாறும்.
விபத்து தவிர்ப்பு: தற்போதைய குறுகலான மற்றும் நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு மாற்றாக, சர்வதேசத் தரத்திலான 4 வழிச்சாலையாக இது அமையும்.
அடுத்த பிளான் என்ன?
NHAI-ன் இந்த டெண்டர் அறிவிப்பு, மேற்கு மற்றும் மத்திய தமிழகத்தை இணைப்பதில் ஒரு மைல்கல். தேர்வு செய்யப்படும் கன்சல்டன்ட்கள், அடுத்த சில மாதங்களில் சாலையின் துல்லியமான வரைபடம், கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள் மற்றும் திட்டத்துக்கான மதிப்பீடு ஆகியவற்றைத் தயார் செய்வார்கள்.
பசுமை வழிச்சாலை என்பதால், விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விவாதங்களும் எழ வாய்ப்புள்ளது. எனினும், "வளர்ச்சிக்கு சாலை அவசியம்" என்பவர்களுக்கும், "வாழ்வாதாரம் முக்கியம்" என்பவர்களுக்கும் இடையே ஒரு சமநிலையை அரசு எப்படிக் கொண்டுவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மத்திய அரசின் 'பாரத்மாலா' போன்ற திட்டங்களின் கீழ் இது வருமா அல்லது தனித் திட்டமா என்பது DPR வெளியான பிறகுதான் முழுமையாகத் தெரியும். ஆனாலும், திருச்சி மலைக்கோட்டையிலிருந்து கோவை மருதமலைக்கு இனி 'ஷார்ட்கட்' ரெடியாகப்போகிறது என்பது மட்டும் நிஜம்!












Click it and Unblock the Notifications