கர்ப்பிணி பெண்கள் காபி குடித்தால் ஆபத்து.. குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படும்! ஆய்வில் ஷாக்
சென்னை: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதைச் சாப்பிட வேண்டும். எதைச் சாப்பிடக்கூடாது என்பதைப் பார்த்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். இதற்கிடையே பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது காபி அதிகளவில் குடித்தால் அது கருவில் உள்ள குழந்தைகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்த நவீன காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம், நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் காரணமாக நமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்..

கர்ப்பிணிப் பெண்கள்: அதிலும் குறிப்பாகப் பெண்கள் கருவுற்று இருக்கும் போது இயல்பாகவே உடலில் பல மாற்றங்கள் நடக்கும். இதனால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து பண்ண வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அதிகம் பசி எடுத்தாலும், ஒரு விஷயத்தைச் சாப்பிடும் முன் அது உடலுக்கு நல்லது தானா என்று பார்த்துத் தான் சாப்பிட வேண்டும்.
இதற்கிடையே கர்ப்பிணி பெண்கள் அதிகம் காபி குடித்தால் அது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், குழந்தைகளுக்கு உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. 12,000 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

காஃபின்: அதில் கர்ப்ப காலத்தில் அதிகம் காஃபின் எடுத்துக் கொண்ட பெண்களின் குழந்தைகள் 9-11 வயதிலேயே அதிக உடல் எடை பருமன் கொண்டவர்களாக மாறுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், காஃபின் அதிகம் எடுத்துக் கொள்ளாத பெண்களின் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் மூளை செயல்பாடு குறைவாக இருப்பதும் இதில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த குழந்தைகளுக்கு மூளையில் உள்ள இன்சுலா என்ற பகுதி தடிமனாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதேநேரம் காபி குடித்தாலே குழந்தைக்கு ஆபத்து என்று இல்லை.. அளவுக்கு அதிகமான காபி குடித்தால் மட்டுமே இந்த சிக்கல்.. கர்ப்பிணி பெண்கள் தினசரி 300 மில்லிகிராம் வரை காஃபின் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம் அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பு 200 மில்லிகிராம் வரை காஃபின் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துகிறது.
எவ்வளவு குடிக்கலாம்: ஒரு கோப்பை, அதாவது 240- 350 மி.லி காபியில் சராசரியாக 140 மில்லிகிராம் காப்பி இருக்கும். அதன்படி பார்த்தால்.. தினசரி ஒன்றரை கோப்பை வரை எடுத்துக்கொள்ளலாம். நம்ம நாட்டில் வெளிநாடுகளைப் போல ஒரே நேரத்தில் இவ்வளவு டீ, காபியை ஒரே நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சின்ன கிளாஸில் தான் குடிப்பார்கள். எனவே, அதை வைத்துப் பார்த்தால் 2 கிளாஸ் வரை குடிப்பது பாதுகாப்பானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது தொடர்பாக ஆய்வாளர் குஷ்பூ அகர்வால் கூறுகையில், "பொதுவாக 200 மில்லிகிராம் வரை பிரச்சினை இல்லை. அதேநேரம் அதை விட குறைவாக குடித்தாலும் அது ரொம்பவே நல்லது தான். அது கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் நல்லது தான். அதேநேரம் இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அதாவது காபியில் மட்டுமே காஃபின் இருக்கும் என நினைத்து காபியைக் குறைவாகக் குடிப்போம். ஆனால், மற்ற விஷயங்களில் கோட்டைவிடுகிறோம்.
இதை நோட் பண்ணுங்க: காஃபின் என்பது காபியில் தான் பிரதானமாக இருக்கிறது என்றாலும் டீ, சில உணவுப் பொருட்கள், சாக்லேட்கள், சில குறிப்பிட்ட மருந்துகளிலும் கூட கணிசமான காஃபின் இருக்கும். அதை நாம் கணக்கில் கொள்ளத் தவறிவிடுகிறோம்" என்றார்.
அதாவது எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்தளவுக்கு முடியுமா அந்தளவுக்குக் குறைந்தளவு காஃபின் எடுத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கும். மேலும், உடல் பருமன் ஏற்பட காரணமாக அமையும். கர்ப்பிணிப் பெண்கள் காபி, டீ மட்டுமின்றி காஃபின் இருக்கும் அனைத்து பொருட்களையும் குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications