ஆரோக்கியமான எதிர்காலம்.. Stroke ஆபத்தை தவிர்ப்பது எப்படி.. மருத்துவர் அறிவுரை என்ன..?
ஸ்ட்ரோக் / பக்கவாதம் என்பது, உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியப்படும் ஒரு கடுமையான உடல்நல பிரச்சனைகளுள் ஒன்றாகும். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைக் கூட உருவாக்கும் இப்பாதிப்பு, உடலின் பல்வேறு உறுப்புகளில் திறனிழப்புகளை ஏற்படுத்திவிடக்கூடும்.
மூளையோடு இணைக்கப்பட்டுள்ள இரத்தநாளங்களில் கிழிசல் ஏற்படும்போது அல்லது அதில் அடைப்பு இருக்கும்போது மூளைக்கு இரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லாதவாறு அது தடுத்துவிடுவதால், ஸ்ட்ரோக் / பக்கவாதம் ஏற்படுகிறது என நரம்பியல் ஆலோசகர் டாக்டர். ஸ்ரீவர்தன் விளக்குகிறார்.

தாமதமின்றி, உடனடியாக அதற்கு சிகிச்சையளிப்பது மூளைக்கு ஏற்படும் சேதத்தின் அளவை குறைக்கவும் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடையும் செயல்முறையை மேம்படுத்தவும் உதவுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக போதுமான, முறையான சிகிச்சை கிடைக்கவில்லையென்றால், பேச்சுத்திறன் பாதிப்பு, கை கால் போன்ற உறுப்புகள் செயலிழப்பு மற்றும் சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும். குழந்தைகளிலிருந்து, முதியவர்கள் வரை அனைத்து வயது பிரிவுகளிலும் ஸ்ட்ரோக் / பக்கவாத தாக்குதல் தற்போது அதிகளவில் காணப்படுகிறது.
பிரச்சனையை சரியாகப் புரிந்துகொள்வது:
முடக்கப்பட்ட உடல் திறன்கள், பேச்சுத்திறன் பாதிப்பு, கை கால் உடலுறுப்புகளில் செயலிழப்பு மற்றும் மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு ஆகியவை பக்கவாதத்தினால் ஏற்படும் பொதுவான கோளாறுகள் அல்லது திறனிழப்புகளாகும்.
பக்கவாதம், உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் ஒரு நபரை பாதிக்கிறது. நீண்டகாலம் நீடிக்கின்ற மனச்சோர்வு, உறங்குவதில் சிரமம், விழுங்குவதில் சிரமம், பார்வைத்திறன் பிரச்சனைகள், உடல்எடை குறைதல் / அதிகரித்தல், அசதி அல்லது களைப்பு, இயற்கை உபாதைகளை அடக்க இயலாமை ஆகியவை பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளால் எதிர்கொள்ளப்படும் முக்கியமான பிரச்சனைகளுள் சிலவாகும்.
ஸ்ட்ரோக் / பக்கவாத நிகழ்வுகள் குறித்த தரவு:
குளோபல் பர்டன் ஆஃப் டிசீசஸ் (Global Burden of Diseases) என்ற அமைப்பின் தரவின்படி, ஸ்ட்ரோக் / பக்கவாதத்தின் காரணமாக ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு நபர் உயிரிழக்கிறார்; இந்தியாவில் உயிரிழப்பிற்கான முதன்மை காரணங்களுள் இரண்டாவதாக இது இருப்பதாக கருதப்படுகிறது.
இந்தியாவில் சராசரியாக 1.85 இலட்சம் நபர்கள் ஸ்ட்ரோக்காலும் மற்றும் அதன் பின்தொடர்ச்சியாக ஏற்படும் ஊனங்களாலும் பாதிக்கப்படுகின்றனர். 68.6% பக்கவாத நிகழ்வுகள் மற்றும் 77.7% ஊனம் / திறனிழப்பு என்ற அளவுகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஸ்ட்ரோக்கின் காரணமாக, ஒரு இலட்சம் நபர்களில் 192 நபர்கள் உயிரிழப்பதாகவும் இது குறித்த தரவு காட்டுகிறது.
ஸ்ட்ரோக் / பக்கவாதத்திற்குப் பிறகு திறனிழப்புகள் வராமல் தடுப்பது பாதிப்பிற்கான காரணங்களை (நீரிழிவு, மிகை இரத்த அழுத்தம், கொழுப்புகளின் சமச்சீரின்மை மற்றும் இதய நோய்கள் போன்றவை) கட்டுப்படுத்துவது மற்றும் மருந்துகள் ஆகியவையும் கூடுதலாக, ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வதும் ஸ்ட்ரோக்கிலிருந்து விரைவாக மீண்டு குணமடைவதற்கு பெரிதும் உதவக்கூடும்.
பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், அதிக நார்ச்சத்துள்ள உணவுகள், கடல் உணவு, முட்டைகள், டோஃபு, பருப்புகள், விதைகள் மற்றும் அவரையின பருப்பு வகைகள் ஆகியவை ஊட்டச்சத்து செறிவாக உள்ள உணவுப்பொருட்களாக இருக்கின்றன. பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள் சாப்பிடும் உணவில் நிறைவுற்ற கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது சத்தில்லாத வெற்று உணவுகள் போன்றவை கண்டிப்பாக இருக்கக்கூடாது.
பக்கவாத திறனிழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு இயன்முறை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு செயல்பாடுகள் அடிப்படை அம்சமாக திகழ்கின்றன. ஸ்ட்ரோக் உடன் தொடர்புடைய பல்வேறு திறனிழப்புகளுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கென்றே குறிப்பாக வடிவமைக்கப்பட்ட மறுவாழ்வு செயல்முறையில் பல அம்சங்கள் இடம்பெறுகின்றன.
2024 - ம் ஆண்டில் பக்கவாத பாதிப்பிற்கான ஆபத்தைக் குறைப்பது கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஸ்ட்ரோக் / பக்கவாத நேர்வுகளின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் இருமடங்காக அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் மிக பொதுவான நோய் பாதிப்புகளுள் ஒன்றாக பக்கவாதம் இருக்கிறது. பக்கவாதத்திற்கான ஆபத்தைக் குறைக்க ஆரோக்கியமான உணவுமுறையை கடைபிடிப்பதும், தவறாமல் தினசரி உடற்பயிற்சி / உடலுழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், உரிய இரத்த அழுத்தத்தைப் பேணுவதும், நீரிழிவுக்கான முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவதும், புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்ப்பதும், முறையான உறக்க பாங்குகளை பின்பற்றுவதும், போதுமான அளவு நீர் அருந்துவதும், கஃபைன் - ஐ உள்ளடக்கிய உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பதும், முறையான உடல்நல மற்றும் மனநலத்தைப் பேணுவதும் பெரிதும் உதவும்.
பிறர் புகைப்பதால் ஏற்படும் புகையை நாம் சுவாசிப்பதும் பக்கவாதத்தை விளைவிக்கக்கூடும்:
CDC ஆய்வறிக்கையின்படி, அருகிலுள்ள பிறர் புகை பிடிப்பதால் உருவாகும் புகை, இதயநோய்கள் உருவாகும் ஆபத்தை 25-30% வரையும் மற்றும் பக்க வாதத்திற்கான ஆபத்தை 20-30% வரையும் அதிகரிக்கக்கூடும். ஒவ்வொரு ஆண்டும், பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதன் காரணமாக, அதன் பின்விளைவாக ஏற்படும் பக்கவாதம் 8000-க்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
குறைந்த அளவு மருந்தினைக் கொண்டுள்ள ஆஸ்பிரின் மாத்திரையை (மருத்துவரின் ஆலோசனையின் படி) எடுத்துக்கொள்வது ஸ்ட்ரோக் / பக்கவாதம் வராமல் தடுக்க உதவும். ஆனால், அளவுக்கு அதிகமாக அல்லது முறைதவறி அது பயன்படுத்தப்படுமானால், மூளையின் உட்புறத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதவற்கு அது வழிவகுக்கக் கூடும்.
இரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை உட்கொள்ள முடிவு செய்யும்போது இரத்தஅழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் போன்ற நோயாளிகளின் பிற உடல்நல பிரச்சனைகளையும் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
பிறர் வெளியிடும் புகையை சுவாசிப்பதனால் ஏற்படக்கூடிய பக்கவாத ஆபத்தைக் குறைக்க பல தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்ட அமைவிடங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது, பக்கவாதம் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் கொள்கை மாற்றங்களை உருவாக்க வலியுறுத்துவது ஆகியவை இவற்றுள் சில நடவடிக்கைகளாக இருக்கலாம்.
முடிவுரை
ஸ்ட்ரோக் / பக்கவாத தாக்குதலுக்குப் பிறகு ஏற்படும் திறனிழப்புகளிலிருந்து மீண்டு இயல்புநிலைக்குத் திரும்பும் செயல்முறைக்கு மருத்துவ இடையீட்டு சிகிச்சைகள், வாழ்க்கைமுறை மேலாண்மை மற்றும் கனிவான, உணர்வு ரீதியிலான ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்ற ஒரு சிக்கலான மற்றும் கடினமான அணுகுமுறை தேவைப்படும்.
ஆரோக்கியமான சிகிச்சை முறைகள் மற்றும் தீர்வுகளை தினசரி வாழ்க்கையில் இடம்பெறச் செய்வதன் வழியாக ஸ்ட்ரோக் / பக்கவாதம் திரும்பவும் வருவதற்கான ஆபத்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களால் கணிசமாக குறைக்க முடியும்; அவர்களது வாழ்க்கையின் ஒட்டுமொத்த தரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உடல்நல அம்சங்கள், பாதிப்புகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் தனித்துவமாக வடிவமைக்கப்படும் வழிகாட்டல் மற்றும் மறுவாழ்வு செயல்முறைக்கு மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, செயல்பட வேண்டுமென்று வலுவாக பரிந்துரைக்கிறார் நரம்பியல் ஆலோசகர் டாக்டர். ஸ்ரீவர்தன்.












Click it and Unblock the Notifications