டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட்நியூஸ்.. தலைவராக பொறுப்பேற்ற உடனேயே பிரபாகர் ஐஏஎஸ் மேஜர் முடிவு
சென்னை: டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் இன்று காலை பொறுப்பேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.கே.பிரபாகர், டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை தாமதிக்காமல் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வர்களுக்கு குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க வெளிப்படைத்தன்மையுடன் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். இவர்களை தமிழக அரசு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக ஆளுநர் நியமனம் செய்கிறார். டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கா.பாலச்சந்திரனின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உறுப்பினராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன் டிஎன்பிஎஸ்சியின் பொறுப்பு தலைவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக நான் இன்று பொறுப்பேற்றுள்ளேன்.. தமிழ்நாட்டில் உள்ள பல லட்சம் மாணவர்கள், அரசு தேர்வுகளில் சேர வேண்டும் என்ற கனவுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை மிகுந்த அக்கறையுடன் தயார் செய்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.. அந்த மாணவர்கள் தேர்வுகளை நல்லபடியாக எழுதும் வகையில், அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு கால அட்டவணையை தயார் செய்து தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள், திறமையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்பதை தலைவராக நான் உறுதி செய்வேன்..
இந்த தேர்வுகளை எழுதிய பின்பு, முடிவுகள் உடனுக்குடன் வர வேண்டும் என்று மாணவர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். அதற்கு தக்கப்படி தேர்வுகளின் முடிவுகளையும் உடனடியாக வெளியிட தக்க நடவடிக்கை எடுப்போம். மேலும் இந்த தேர்வுகளுடன் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதுகிறார்கள்.. எனவே அந்த கால அட்டவணையும், இந்த கால அட்டவணையும் ஒருங்கிணைந்து இருக்கும் வகையில், அனைத்து நடவடிக்கையும் நாங்கள் எடுத்து, முடிவுகளையும் உடனுக்குடன் வெளியிட்டு, தமிழக அரசு பணியில் சேர விரும்பும் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வண்ணம், அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாக பலரும் நிறைய ஆலோசனைகளை வழங்கி கொண்டு வருகிறார்கள்.. அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு அமைப்பு.. இதில் பல ஆண்டுகளாக பல்வேறு முறை முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு நல்ல நிலையில் தற்போது உள்ளது. இதிலும் இன்னும் சிறப்பாக செய்வதற்காக செய்தியாளர்களாகிய உங்களிடமோ அல்லது தேர்வு எழுதும் மாணவர்களிடமோ இருந்து வந்தால் அதனை நிச்சயம் பரிசீலிப்போம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகடள விரைவில் வந்தால் தான் அதில் சேருவதா அல்லது வேறு பணிகளில் சேருவதா என்பதை முடிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும். தாமதம் கிடைக்கும் போது ஒருவரே இரண்டு மூன்று வேலைகளை பெற்றுக்கொண்டு பிற மாணவர்கள் அந்த வேலைகளுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் குறைந்து போய்விடும்.
எனவே இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பார்த்து, மற்ற தேர்வுகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து, அதில் நல்ல பழக்கம் இருந்தால், அதனைநாங்கள் இதில் பின்பற்றுவோம்.. அத்துடன் தேர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நாங்கள் நிச்சயமாக குறைப்போம். அதாவது தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுதை குறைப்பதே எங்கள் முதல் இலக்கு. பெரும் தேர்வுகள் நடத்துவது மற்றும் முடிவுகள் வெளியிடுவதில் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சரியான சிஸ்டத்தை நிச்சயம் உருவாக்குவோம்" இவ்வாறு எஸ்கே பிரபாகர் ஐஏஎஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications