எஸ்மா: திமுக- காங்கிரஸ்- இடதுசாரிகள் தமிழகம் முழுவதும் கூட்டாக போராட்டம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள்நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்துதமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இன்று எதிர்க் கட்சிகளின் கூட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தூண்டியதாக கருணாநிதி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதைக்கண்டித்து சமீபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன் படி இன்று போராட்டம் நடத்தப்படுகிறது.
திமுகவுடன் இணைந்து போராட மாநில காங்கிரசாருக்கு சோனியா காந்தி அனுமதி தந்துள்ளார். ராஜிவ் காந்தியின்மரணத்துக்குப் பின் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒரே அணியில் திரண்டு வருவது இதுவே முதல் முறையாகும்.இதனால் தமிழகத்தில் புதிய அணி உருவாவதற்கு இந்தப் போராட்டம் ஒரு துவக்கமாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை, தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் பொன்த்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு மற்றும் நான்கு கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஈரோட்டில் நடந்த போராட்டத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பெயசாமி தலைமை தாங்கினார்.சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் போராட்டம் நடந்தது.
இன்று மாலை சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் திமுகபொதுச் செயலாளர் அன்பழகன், காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
செங்கல்பட்டில் நடக்கும் போராட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அந்தமாவட்ட காங்கிரஸ், இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். கோவை உள்ளிட்ட சிலமாவட்டங்களிலும் இன்று மாலையில் போராட்டம் நடக்கிறது.
இதேபோல மற்ற மாவட்டங்களிலும் திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து போராட்டம்நடத்தவுள்ளனர்.
இந்தப் போராட்டம், புதிய அரசியல் கூட்டணியின் முதல் படி என்று அரசியல் வட்டாரத்தில் வர்ணிக்கப்படுகிறது.ஏற்கனவே, இந்தப் போராட்டத்தை மிகப் பெரிய வெற்றியாக மாற்றித் தர வேண்டும் என்று திமுகதொண்டர்களுக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே எஸ்மா வழக்கின் கீழ் கருணாநிதி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படலாம்என்ற வதந்தியும் தமிழகத்தில் பரவிக் கிடக்கிறது.












Click it and Unblock the Notifications