இடிப்பு: சி.எம்.டி.ஏ.வுக்கு அதிமுக கேள்வி
சென்னை: அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை இடிப்பது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ், முதல்வருக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், சட்டசபை அதிமுக கொறடாவுமான கே.ஏ.செங்கோட்டையன் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை (சிஎம்டிஏ) கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் சிஎம்டிஏ உறுப்பினர்-செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 2ம் தேதி அதிமுக அலுவலகத்தை இடிப்பது தொடர்பான நோட்டீஸ் கிடைக்கப் பெற்றது. இதுதொடர்பாக எங்கள் கட்சியின் பொதுசெயலாளர் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதற்கு, இந்த நோட்டீஸ் தனக்கு தெரிவிக்காமல் அனுப்பப்பட்டுள்ளது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். எனவே இது முதல்வருக்கு தெரியாமல் அனுப்பப்பட்டதா என தெரிந்துக் கொள்ள அதிமுக விரும்புகிறது.
இக்கடிதம் பெற்ற 2 நாட்களுக்குள் சிஎம்டிஏ விளக்கம் தரவேண்டும். அப்படி தராவிட்டால் முதல்வரின் கருத்துப்படி இந்த நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதாக கருதப்படும்.
முதல்வர் கருணாநிதியின் கருத்துக்கு மாறாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தால் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்த பதில் மூலம் அதிமுக ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்க இயலும்.
சிஎம்டிஏ இந்த நோட்டீஸை அரசாங்கத்திற்கு தெரியாமல் அனுப்பியிருந்தால் அரசு செயல்படும் விதத்தை வெளிகாட்டுவதாக இந்த நடவடிக்கை அமையும்.
இந்த விஷயத்தில் சிஎம்டிஏவிடமிருந்து உறுதியான பதிலை அதிமுக விரும்புகிறது. இந்த கடிதத்திற்கு பதில் அனுப்பாவிட்டால் அரசாங்கத்திற்கும், சிஎம்டிஏவிற்கும் அடிப்படை நாகரீகம் இல்லை என்ற முடிவிற்கு அதிமுக வரவேண்டியிருக்கும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தின் நகல் முதல்வர் கருணாநிதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications