பாரம்பரியச் சின்னமானது டெல்லி செங்கோட்டை
டெல்லி:
உலக பாரம்பரியச் சின்னங்களின் வரிசையில் புகழ் பெற்ற டெல்லி செங்கோட்டை இடம் பெற்றுள்ளது.
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, உலகில் உள்ள பழங்கால வரலாற்றுச் சின்னங்களை பெருமைப் படுத்தும் வகையில் அவற்றைத் தேர்வு செய்து உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தை அளித்து வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த 26 அமைப்புகளுக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான பாரம்பரிய சின்னத்தை தேர்ந்தெடுக்க அனைத்து நாடுகளுக்கும் யுனெஸ்கோ அமைப்பு அழைப்பு விடுத்தது.
அதன் பேரில் 38 நாடுகள் மொத்தம் 45 வரலாற்றுச் சின்னங்களை அனுப்பியிருந்தன.அதில் டெல்லி செங்கோட்டையும் ஒன்று. நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் கூடிய யுனெஸ்கோ பாரம்பரியச் சின்ன தேர்வுக் குழு தீவிர பரிசீலனை செய்து நான்கு அமைப்புகளை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை, ஜப்பானில் உள்ள வெள்ளி சுரங்கம், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓபரா அரங்கம் மற்றும் துர்மெகிஸ்தான் நாட்டில் இருக்கும் பார்த்தியன் கோட்டை ஆகியவையே அவை.
டெல்லி செங்கோட்டை கி.பி. 17-ம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. முகலாய கட்டடக் கலையின் உன்னதத்தைப் பறை சாற்றுவதாக செங்கோட்டை உள்ளது.
கோட்டையில் உள்ள ஒவ்வொரு மாடமும் இந்து மற்றும் பாரசீக கலாசாரங்களை பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. திருக்குரானில் சொர்க்கம் எவ்வாறு இருக்க வேண்டும் எனறு கூறப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்துக் கட்டப் பட்டது செங்கோட்டை.
செங்கோட்டை ஏற்கனவே 1993-ல் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது. ஆனால் அப்போது செங்கோட்டையின் பெரும்பகுதி ராணுவத்தின் வசம் இருந்தது.
அதன் பின்னர் ராணுவம் வெளியேற்றப்பட்டு மத்திய தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தொல்பொருள் துறை செங்கோட்டையை புதுப்பித்து புனரமைத்தது.












Click it and Unblock the Notifications