பூசாரிக்கு அடி,உதை-நேரில் பார்த்தபெண் அதிர்ச்சியில் பலி
திருநெல்வேலி:
கோவிலில் தங்கியிருந்த மன நலம் பாதித்த வாலிபர், கோவில் பூசாரியை அடித்து உதைத்ததை நேரில் பார்த்த, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியில் மரணமடைந்தார்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அய்யனார்குளத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அங்குள்ள நாராயணசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார். குறி சொல்லி வந்த காளிமுத்துவிடம் பலரும் அணுகி குறி கேட்பது வழக்கம்.
மன நலம், உடல் நலம் பாதிக்ப்பட்டவர்களை இங்கு தங்க வைத்து குணப்படுத்தியும் அனுப்புகிறார் காளிமுத்து. பில்லி சூன்யம் எடுப்பது, செய்வினை எடுப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறார். இதனால் இவரிடம் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் சேரன்மாதேவியைச் சேர்ந்த மோகன் என்கிற கல்லூரி மாணவருக்கு மனம் நலம் பாதித்தது. அவரை, காளிமுத்துவிடம் கொண்டு வந்தனர்.
கடந்த 2ம் தேதி நாராயணசாமி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார் மோகன். அந்த சமயத்தில், காளிமுத்துவின் சிகிச்சைக்காக சித்திரைகனி என்ற 39 வயதுப் பெண்ணும், சுப்ரமணியன் என்கிற 53 வயது முதியவரும் தங்கியிருந்தனர்.
நேற்று இரவு மோகனுக்கு மன நல பாதிப்பு அதிகமானது. சத்தமாக பேசியபடி அங்கும் இங்கும் நடந்த மோகன், பூசாரி காளிமுத்துவையும், சுப்ரமணியனையும் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார்.
அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் இருவரும் தடுமாறினர். இதைப் பார்த்த சித்திரைக்கனி அதிர்ச்சி அடைந்தார். அவர் பக்கவாதத்தை குணப்படுத்துவதற்காக வந்திருந்தார். எனவே எழுந்து ஓடவும் முடியாமல், தன் கண் முன்னால் பூசாரிக்கு சரமாரியாக அடி விழுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த அதிர்ச்சியிலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து சித்திரைக்கனி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மோகன், அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications