திமுக பேரணியை எதிர்த்து வழக்கு
சென்னை:உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அண்ணா சாலையில் பேரணி நடத்தியது, மேடை போட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி பொது நலன் வழக்கு போட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி, பொது நலன் வழக்குகளைப் போடுவதில் பிரபலமானவர். இவர் போட்ட பல பொது நலன் மனுக்களால் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.
இரு சக்கர வாகனங்ளில் செல்வோர் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவரும் இந்த ராமசாமிதான்.
இந்த நிலையில், சென்னையில் நடந்த திமுக பேரணி குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார் ராமசாமி. இதுகுறித்து அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், கடந்த ஜூலை 1ம் தேதி சென்னையில் மகளிர் பேரணி நடந்தது. திமுக சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் பிரதீபா பாட்டீல் கலந்து கொண்டார்.
இந்த பேரணி உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் நடத்தப்பட்டது. பெரிய நெடுஞ்சாலைகளில் பேரணிகள் செல்வது, மேடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆனால் அண்ணா சாலையில் இந்த இரண்டும் மீறப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு அண்ணா சாலையில் பேரணி நடத்தப்பட்டது. மேலும் அண்ணா சாலையில் மேடையும் போட்டுள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி மின்வாரியம், சென்னை மாநகராட்சி, மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே எனது புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோருகிறேன் என்று கூறியுள்ளார் ராமசாமி.












Click it and Unblock the Notifications