8 அரவாணிகளுக்கு இனமாற்று ஆபரேஷன்:வேலூர் மருத்துவமனையில் திடீர் ரத்து
வேலூர்:வேலூர் அரசு மருத்துவமனையில் நடப்பதாக இருந்த அரவாணிகளுக்கான இன மாற்று ஆபரேஷன், மருத்துவ சேவை இயக்குநரகம் அனுமதி அளிக்காததால் ரத்து செய்யப்பட்டது.
ஆணாக இருந்து பெண்ணாக மாற விரும்புபவர்களுக்கு மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை வசதிகள் உள்ளன. இதற்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும்.
எனவே இதுபோன்ற இனமாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்களுக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அரசு உரிய வசதியை செய்து கொடுத்தது.
இதைத் தொடர்ந்து இங்கு 8 அரவாணிகள் அறுவைச் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வது தொடர்பான அனுமதியை வழங்குமாறு மருத்து சேவை இயக்குநரகத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் கடிதம் அனுப்பியது.
நேற்று அறுவைச் சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அனுமதிக் கடிதம் வரவில்லை. இதையடுத்து அவர்களுக்கான அறுவைச் சிகிச்சை ரத்து செய்யப்பட்டது. இன்னும் ஒரு மாதம் கழித்தே அது நடைபெறும் என மருத்துவமனை டீன் மணிவேல் கூறினார்.
அவர் கூறுகையில், மருத்துவ சேவை இயக்குநரகத்தின் அனுமதிக் கடிதம் வராததால், அறுவைச் சிகிச்சை ரத்து செய்யப்பட்டது. மூன்று வாரங்கள் கழித்தே அறுவைச் சிகிச்சை நடைபெறுவற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்.
தமிழகம் முழுவதும் 2 லட்சம் அரவாணிகள் உள்ளதாக ஒரு கணக்கு கூறுகிறது. அதில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1,500 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications