மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் பிரதீபாமுதல் கையெழுத்திட வேண்டும் - ராமதாஸ்
திருநெல்வேலி:நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில்தான் பிரதீபா பாட்டீல் முதல் கையெழுத்தைப் போட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் ஆவதன் மூலம்தான் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா சட்டமாகப் போகிறது என்று சென்னையில் பிரதீபாவுக்காக திமுக ஏற்பாடு செய்திருந்த மகளிர் பேரணியில் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.
ஆனால் இதை அப்போது ராமதாஸ் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் நெல்லை வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதீபா பாட்டீல், தனது முதல் கையெழுத்தாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், எதிர்பார்க்கப்பட்டதற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
குடியரசுத் தலைவர் பதவியை முதல் முறையாக ஒரு பெண் அலங்கரிக்கப் போகிறார். இது பெண் குலத்துக்குக் கிடைத்த பெருமை.
ஆனாலும், பெண் குலத்திற்கு இன்னும் பெருமை கிடைக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அந்த சட்டத்தில் பிரதீபா பாட்டீல் கையெழுத்திட வேண்டும். அதுதான் அவர் போடும் முதல் கையெழுத்தாக இருக்க வேண்டும்.
ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது மேற்கு வங்கம், கேரளாவில் உள்ள நடைமுறை தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதை வரவேற்கிறேன்.
இதை எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக நான் கருதவில்லை. சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு கோடி மக்களின் வெற்றியாகத்தான் பார்க்கிறேன்.
சுய நிதிக் கல்லூரிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி தடுக்கப்படும் நிலையை மாற்றி, அவர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
கட்டாய நன்கொடையைத் தடுக்க மாவட்டந்தோறும் ஒரு பொறியியல் கல்லூரியை அரசே தொடங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். தற்போது அதையும் முதல்வர் ஏற்றுள்ளார்.
மாவட்டத்துக்கு 4 அரசு பொறியியல் கல்லூரிகள்:
மாவட்டந்தோறும் ஒரு கல்லூரியைத் தொடங்கினால் 6,000 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 4 கல்லூரிகள் என்ற விகிதத்தில் 100 கல்லூரிகளைத் தொடங்க வேண்டும்.
கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக என்னுடன் விவாதிக்க முதல்வரின் செயலாளர் வந்திருந்தார். அவரிடம் கேபிள் டிவி தொடர்பான திட்டங்களைக் கொடுத்துள்ளேன் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications