சேலம் கோட்ட எல்லையை மாற்ற மத்தியbr/அரசு முடிவு - தமிழகத்திற்குப் பாதிப்பு?
டெல்லி:
சேலம் ரயில் கோட்டத்தின் எல்லைகளை, கேரளாவுக்குப் பாதிப்பு வராத வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கேரள முதல்வர் அச்சுதானந்தனின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் கோவை, திருப்பூர் ஆகியவை சேலம் கோட்டத்தின் கீழ் வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
பாலக்காடு ரயில் கோட்டத்தை கேரள அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் கேரளா செல்லும் ரயில்களை மறிக்கும் போராட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தின. இதையடுத்து திட்டமிட்டபடி ரயில்வே கோட்டம் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உறுதியளித்தார்.
இந்த நிலையில் டெல்லி வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை முதலில் சந்தித்தார். அவரிடம், சேலம் கோட்டம் அமைவதை எதிர்க்கவில்லை. அதன் எல்லைகள் விஷயத்தில்தான் நாங்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
சேலம் கோட்டம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு உறுதியாக இருந்தால் அதற்குப் பதிலாக கேரளாவில் புதிய ரயில்வே மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் மாலையில் பிரதர் மன்மோகன் சிங்கையும் அச்சுதானந்தன் சந்தித்தார். பிரதமரிடமும் இதே கோரிக்கையை அவர் வலியுறுத்தினார். பாலக்காடு கோட்டத்திலிருந்து சில முக்கிய பகுதிகளை (திருப்பூர், கோவை, ஈரோடு) பிரித்து சேலம் கோட்டத்தில் சேர்த்தால் தங்களது மாநிலத்திற்கு பெரும் வருவாய் பாதிப்பு ஏற்படும் என அவர் பிரதமரிடம் கூறினார்.
இதை ஈடுகட்டும் வகையில் புதிதாக ரயில் மண்டலம் மற்றும் கேரளாவில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை ஆகியவற்றை தொடங்க வேண்டும் என பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ரயில்வே அமைச்சருடன் கலந்து பேசி கேரளாவின் நலன் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், சேலம் கோட்டம் அமைவதை நாங்கள் எதிர்க்கவில்லை. கேரளாவில் உள்ள கணிசமான பகுதிளை சேலம் கோட்டத்துடன் இணைப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
சேலம் ரயில் கோட்டத்தின் கீழ் வரும் பகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.
இதையடுத்து எந்தெந்த பகுதிகளை சேலம் கோட்டத்துடன் சேர்க்க்க கூடாது என்ற பட்டியலுடன் அச்சுதானந்தனும், கேரள மாநில எம்.பிக்களும் இன்று லாலுவை மறுபடியும் சந்தித்துப் பேசவுள்ளனர். அப்போது, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகியவற்றை பாலக்காடு கோட்டத்திலேயே நீடிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுப்பார்கள் எனத் தெரிகிறது.
இந்த மூன்று ரயில் நிலையங்களும்தான் மிகவும் அதிக வருவாய் கொடுக்கும் பகுதிகள் ஆகும். இந்த மூன்று ரயில் நிலையங்களையும் இழக்க கேரள அரசு விரும்பவில்லை. ஆனால் இந்த மூன்று ரயில் நிலையங்களையும் சேலம் கோட்டத்துடன் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அந்த ஊர் மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மூன்று ஊர்களையும் சேலம் கோட்டத்தில் சேர்க்க மறுத்தால் தமிழகத்திற்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மறுபடியும் பெரும் போராட்டம் வெடிக்கக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications