சன் டிடிஎச்: கேபிள் ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தயாநிதியை முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை:
சன் குழுமத்தின் சார்பில் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சன் டைரக்ட் என்ற டிடிஎச் ஒளிபரப்புக்கு தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். பல இடங்கள் சன் குழு சானல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும் சன் டைரக்ட் டிடிஎச் ஆண்டெனாக்கள் விற்பனை செய்யும் கடைகளும் சூறையாடப்பட்டன.
திமுக மற்றும் முதல்வர் கருணாநிதியின் அன்பையும், ஆதரவையும் இழந்த சன் குழுமம் தற்போது அதிரடியான ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழக அரசு சார்பில் கேபிள் டிவி கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தாங்கள் நடத்தி வரும் எஸ்.சி.வி. நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும், தங்களது சானல்களை முழுமையாக காட்ட மாட்டார்கள் என்ற அச்சம் சன் குழுமத்தாரிடம் எழுந்துள்ளது.
இதையடுத்து அதிரடியாக சன் டைரக்ட் என்ற டிடிஎச் ஒளிபரப்பை நேற்று முதல் சன் குழுமம் தொடங்கியுள்ளது. இதற்கான அனுமதியை தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோதே, சன் குழுமம் பெற்றிருந்தது. ஆனால் திடீரென நேற்று முதல் தனது டிடிஎச் ஒளிபரப்பை சன் டிவி தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சேருவோருக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளையும் சன் குழுமம் அறிவித்துள்ளது. 75 சேனல்கள், 15 எப்.எம். சானல்கள் சன் டிடிஎச் மூலம் வழங்கப்படும். மாதம் ரூ. 75 மட்டுமே கட்டணம், செட் டாப் பாக்ஸ், டிஷ் ஆண்டெனா ஆகியவை இலவசம் என சன் குழுமம் அறிவித்துள்ளது.
இதைக் கண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சன் டிடிஎச்சால் தங்களது பிழைப்பு பாதிக்கும் என்று அஞ்சிய அவர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
தமிழகம் முழுவதும், சன் குழுமச் சானல்களின் ஒளிபரப்பைத் துண்டித்தனர். இதனால் நேற்று காலை முதல் மாலை வரை சன் குழுமச் சானல்கள் எதுவும் தெரியவில்லை. அதே அலைவரிசையில் இடம் பெற்றுள்ள பிற தமிழ்ச் சேனல்களும் தெரியவில்லை. கலைஞர், தூர்தர்ஷன் மற்றும் ஜெயா டிவி சானல்கள் மட்டுமே தெரிந்தன.
சென்னையில் சன் டிவி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் முன்பு பெரும் திரளான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆனால் எஸ்.சி.வி. அலுவலகத்திற்குப் போய் போராடுங்கள் என்று கூறப்பட்டதால், குங்குமம் பத்திரிக்கை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எஸ்.சி.வி. அலுவலகத்திற்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சென்றனர்.
அப்போது அங்கு தயாநிதி மாறன் வந்தார். இதையடுத்து அவரை முற்றுகையிட்டு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர், அவர்களிடம் சன் டைரக்ட் டிடிஎச் குறித்து விளக்கினார். ஆனால் அவர்கள் அதைக் கேட்பதாக இல்லை. பின்னர் பாதுகாவலர்கள் வந்து தயாநிதி மாறனை பத்திரமாக உள்ளே கூட்டிச் சென்றனர்.
இந்த நிலையில், சன் டைரக்டர் டிடிஎச்சின் டிஷ் ஆண்டெனக்காள் விற்பனை செய்யும் கடைகள் மீது போலீஸார் திடீர் நடவடிக்கை எடுத்து அந்தக் கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தினர். மதுரையில் விற்பனைக்காக அறிவிக்கப்பட்டிருந்த நான்கு கடைகளையும் போலீஸார் கட்டாயப்படுத்தி மூடி விட்டனர்.
மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 கடைகள் மூடப்பட்டதாகவும், அந்த கடைகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களைக் கைது செய்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மு.க.அழகிரியின் உத்தரவின் பேரில்தான் தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டீலர்கள் குமுறியுள்ளனர்.
மதுரையில் உள்ள சன் டிவி அலுவலகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளை கேபிள் ஸ்டிரைக்:
இதற்கிடையே, சன் டிடிஎச்சை எதிர்த்து தென்னிந்தியா முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்து நாளை ஸ்டிரைக் செய்யவுள்ளனர். நாளை முழுவதும் சன் குழுமச் சானல்கள் எதையும் ஒளிபரப்ப மாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் சகீலன் கூறுகையில், சன் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மோசடி வேலையாகும். மக்களை ஏமாற்றிப் பணம் சுரண்டவே இந்த டிடிஎச்சை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பத்தில் கட்டணத்தைக் குறைத்து அறிவித்து விட்டு பின்னர் அதிகரிப்பார்கள். இப்படித்தான் தினகரன் பத்திரிக்கையை 1 ரூபாய்க்கு தருவதாக கூறினார்கள். இன்று அதன் விலை மற்ற பத்திரிக்கைகளைப் போலத்தான் உள்ளது.
சன் குழுமத்தின் இந்த செயல் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பிழைப்பில் மண்ணைப் போடும் செயல். இதை அனுமதிக்க மாட்டோம்.
இதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்டிரைக்கில் குதிக்கிறோம். சன் குழுமத்தின் 20க்கும் மேற்பட்ட சானல்களை மட்டும் ஒளிபரப்ப மாட்டோம். தமிழகம் மட்டுமல்லாது, புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
சன் டிவியின் இந்தப் போக்கைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி, திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.
சன் குழுமத்திற்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மட்டுமல்லாது திமுகவினரும் திரண்டிருக்கின்றனர். காரணம், கலைஞர் டிவிக்கும் இந்த டிடிஎச்சால் ஆபத்து என்பதால். எனவே அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையும் களம் குதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாறன் சகோதரர்கள் உருவபொம்மை எரிப்பு:
இது தொடர்பாக இன்று ஈரோட்டில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன் ஆகியோரது உருவ பொம்மையையும், தினகரன் நாளிதழையும் எரித்து சன் டிவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் போலீசார் எவரையும் கைது செய்யவில்லை.












Click it and Unblock the Notifications