அரசு கவிழாது, இடைத் தேர்தல் வராது-சோனியா

டெல்லி: நாடாளுமன்றத்துக்கு எக்காரணம் கொண்டு இடைத் தேர்தல் வராது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறியுள்ளனர்.
இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் சம்மிட் நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தியிடம், அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெறும் சூழல் உள்ளதே என்று கேட்டபோது,
இந்த விவகாரம் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு உள்ள ஒரே விவகாரமே இது தான் என்பது போல ஊதப்படுகிறது. இந்த ஒப்பந்ததோடு எல்லாமே முடிந்து போய்விடும் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசுக்கு இதுவும் ஒரு பிரச்சனை, அவ்வளவு தான். அதை எதிர்கொள்வோம் என்றார்.
அணு ஆயுத விவகாரத்தில் இடதுசாரிகளை நான் குறிப்பிட்டு தாக்கவோ அல்லது அவர்களுடனான கருத்து வேறுபாடுகளை பொதுவிடத்தில் வைத்துப் பேசவோ இல்லை. அது என் வழக்கமும் அல்ல.
ஹரியாணாவில் நடந்த நிகழ்ச்சியில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று நான் குறிப்பிட்டது எதிர்க் கட்சிகளைத் தான், இடதுசாரிகளை அல்ல என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது தான் என் கருத்து. இந்த அரசு முழு ஆட்சி காலமும் பதவியில் இருக்கும். அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறாவிட்டல் அது வருத்தமான விஷயம் தான். ஆனால், வாழ்க்கையில் சில வருத்தங்கள் ஏற்பட்டாலும் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போய்த்தானே ஆக வேண்டும்.
தேர்தலுக்கு மிக நீண்ட நாட்கள் உள்ளன. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இந்த அரசு பதவியில் இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications
