அரசியல்வாதிகள்-கூலிப் படை கூட்டணி: ராமதாஸ் கடும் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் அரசியல்வாதிகளின் அரவணைப்பில் கூலிப் படையினர் உலா வருவதும் சுதந்திரமாக சுற்றித் திரிந்து நினைத்ததை சாதித்து கொள்வதுமான புதிய வன்முறைக் கலாசாரம் பொதுவாழ்வில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு கவலையையும், பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஒரே நாளில் இரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.
பீகார், உ.பி. போன்ற சில மாநிலங்களில் மட்டுமே நடப்பதாகக் கேள்விப்பட்டு வந்த வன்முறைக் காரியங்களும், படுகொலைகளும் மெல்ல, மெல்ல தமிழகத்திலும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.
கூலிக்கு ஆட்களை அமர்த்தி கொலை செய்யும் வன்முறைக் கலாசாரம் பரவி வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.
முன்பெல்லாம் அரசியல்வாதிகளின் தயவும் அரவணைப்பும் வேண்டும் எனக் கருதி அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரைமறைவில் மறைந்திருந்து செயல்பட்ட கூலிப்படை தாதாக்களும், போக்கிரிகளும் இன்றைக்கு நேரடிடையாக அரசியலுக்குள் நுழைய ஆரம்பித்திருக்கிறார்கள்.
பல அரசியல் பிரமுகர்கள் இத்தகைய தாதாக்களின் பாதுகாவலர்களாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் அரவணைப்பில் கூலிப் படையினர் உலா வருவதும் சுதந்திரமாக சுற்றித் திரிந்து நினைத்ததை சாதித்து கொள்வதுமான புதிய வன்முறைக் கலாசாரம் பொதுவாழ்வில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு கவலையையும், பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பொது வாழ்க்கைக்கும், பொது அமைதிக்கும் எதிரான இந்த ஆபத்து தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில் படுகொலைகளும், சட்டத்திற்கு புறம்பான பஞ்சாயத்துக்களும், கட்டாய நிலப் பறிப்பு போன்ற நிலபேர மோசடிகளும் குறையும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும், இந்த ஆபத்தை அவசர உணர்வுடன் உணர்ந்து களையெடுக்க வேண்டும்.
அத்துடன், போலீஸ் துறையில் பணியாற்றுகிற சிலருக்கும் சமூக விரோதக் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பும் துண்டிக்கப்பட வேண்டும். சமூகப் பொறுப்பும் கடமை உணர்வும் மிக்க மூத்த அதிகாரிகளைக் காவல் துறையின் உயர் பதவிகளில் அமர்த்த வேண்டும்.
மெல்ல, மெல்ல பரவி வரும் வன்முறைக் கலாசாரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து தடுக்க அனைவருக்கும் பொறுப்பு உண்டு.
ஆனால், இதில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.


Click it and Unblock the Notifications
