நீதிபதிகள் எல்லை தாண்டி செயல்படக் கூடாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: நீதிபதிகள் தங்களது எல்லையைத் தாண்டி செயல்படக் கூடாது. அரசு நிர்வாகத்தை நடத்த முயலக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பை அளித்தது. அதில், ஹரியாணா சுற்றுலா வளர்ச்சிக் கழம் நடத்தி வரும் கோல்ப் கிளப்பில், ஒரு டிராக்டர் டிரைவர் பதவியை உருவாக்கி, அதில் 2 தோட்டக்காரர்களுக்கு டிரைவர் வேலை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹரியாணா சுற்றுலா வளர்ச்சிக் கழகம், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.மாத்தூர், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
நீதிபதிகள் கூறுகையில், நீதிபதிகள் தங்களது எல்லையை உணர வேண்டும். அரசாங்கத்தை நடத்த நினைக்கக் கூடாது. நாடு முழுவதும் பல்வேறு நீதிபதிகள் இதுபோல எல்லை மீறி நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
நர்சரி பள்ளி அட்மிஷனை முறைப்படுத்துவது, ஆட்டோ ரிக்ஷாக்களில் கூடுதல் கட்டணம் கேட்பதைக் கண்டிப்பது போன்றவற்றில் எல்லாம் தலையிடும் அளவுக்கு நீதிபதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது தவறானது மட்டுமல்லாமல் சட்ட விரோதமானதும் கூட. நீதித்துறை நடவடிக்கை என்ற பெயரில் நீதிபதிகள் தங்களது எல்லையைத் தாண்டி செயல்பட முடியாது. அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய வேலைகளை இவர்கள் செய்யக் கூடாது.
டெல்லியில் சாலைகளில் உள்ள ஸ்பீட் பிரேக்கர்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்ப்பு கூறுகிறார்கள். பள்ளிகளில் இலவச சீட்களின் எண்ணிக்கை, தகுதி குறித்தும் தீர்ப்பு கூறுகிறார்கள். இதெல்லாம் நீதிபதிகள் செய்ய வேண்டிய வேலை அல்ல.
ஒரு சட்டம் என்று இருந்தால் அதை அமல்படுத்த நீதிபதிகள் வலியுறுத்தலாம், முனையலாம். ஆனால் நீதிபதிகளே ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி, அதை பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கூறினர்.


Click it and Unblock the Notifications
