திருப்பூரை தனி மாவட்டமாக்க நடவடிக்கை - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil


திருப்பூர்: கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூரை பிரித்து தனி மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திருப்பூர் மற்றும் ஈரோடு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சமீபத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவற்றின் தொடக்க விழா நேற்று திருப்பூர் மற்றும் ஈரோட்டில் நடந்தது.

நேற்று காலை திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். மாலையில் ஈரோட்டில் நடந்த விழாவில் ஈரோடு மாநகராட்சியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், திருப்பூரில் ஒரு நெல்லை மாநாட்டைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

நெல்லையில் மாநில மாநாட்டை நடத்தி இளைஞர்களின் திறமைகளை, வலிமைகளை ஸ்டாலின் நிரூபித்துக் காட்டினார். இப்போது திருப்பூர் வட்டார தோழர்களை இணைத்து மாநாட்டைப் போல இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலினுக்கும், அவரது தலைமையின் கீழ் இயங்கும் துறைக்கும், திருப்பூர் தோழர்களுக்கும் பாராட்டு, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர், திராவிட இயக்க வரலாற்றில் திருப்பு ஊராக இருந்துள்ளது. இங்குதான் முதன் முதலில் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சந்தித்துக் கொண்டனர். இதன் பின்னரே திராவிட இயக்கம் வலுப்பெற்று விரிவடைந்தது.

திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அப்படிப்பட்ட ஊரில் ஒரு பனியன் தொழிலாளி, நகராட்சித் தலைவராக உள்ள செல்வராஜ், மேயராகிறார்.

1959ம் ஆண்டு சென்னைக்கு முதல் மேயரைத் தேர்வு செய்ய வேண்டியதாயிருந்தது. இதற்காக அண்ணா என் வீட்டில், நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் ஆகியோரோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

முனுசாமி, அ.பொ. அரசு ஆகியோரில் ஒருவரை மேயராக தேர்வு செய்ய வேண்டும். யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம். அப்போது என் தாயார் அஞ்சுகத்தம்மையாரிடம் அண்ணா வேடிக்கையாக, யாரை மேயராக்கலாம் என்று வேடிக்கையாக கேட்டார். அதற்கு எனது தாயார் அரசைக் கொண்டு வாருங்கள், அப்போதுதான் நம்முடைய அரசு வரும் என்றார்.

துணை மேயராக ஆதி திராவிட தோழரை நியமிக்க வேண்டும் என்றார் அண்ணா. ஆதி திராவிட தோழர் சிவசங்கரன் என்பவர் அண்ணா வீட்டு அருகில் குடிசையில் வசித்து வந்தார். அவரது குடிசைக்குள் குணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும்.

சிவசங்கரனை அழைத்து துணை மேயராகுமாறு அண்ணா கூறினார். பின்னர் என்னைச் சந்தித்த சிவசங்கரன், என்னை துணை மேயராகச் சொல்கிறார். ஆனால் அவசரத்திற்குத் தொடர்பு கொள்ள என்னிடம் ஒரு தொலைபேசி கூட இல்லை என்றார். இதை நான் அண்ணாவிடம் தெரிவித்தேன். அப்போது அண்ணா கட்சி செலவில் சிவசங்கரனுக்கு தொலைபேசி வாங்கித் தரச் சொன்னார்.

சென்னையின் முதல் மேயரான அரசு சிந்தாதிரிப்பேட்டையில் அச்சுத் தொழிலாளி. அவரையே முதல் மேயராக்கியது திராவிட வரலாறு. இதுவே திராவிட இயக்கத்தின் வழக்கம். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் திமுக பதவிகள் வழங்கும்.

சாதாரண பனியன் தொழிலாளிக்கு திருப்பூர் மாநகராட்சி பதவி பரிசாக கிடைத்துள்ளது. மேயருக்கான செங்கோல், தங்க செயின் நன்கொடையாக கிடைத்துள்ளது. மேயர் பதவியை திமுக நன்கொடையாக கொடுத்துள்ளது.

தனி மாவட்டம் பற்றி இங்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையம் அறிக்கை தர வேண்டும். அந்த அறிக்கையை கேட்டுப் பெற்று, சட்டசபை கூடும் முன்பாகவே பெற்று, சட்டசபை கூடும்போது ஆவண செய்யப்படும், நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

மாநகரைப் பெற்றீர்கள், இனி மாவட்டத்தையும் பெற கைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்றார் முதல்வர் கருணாநிதி.

மேலும் 100 சமத்துவபுரங்கள்:

பின்னர் மாலையில் ஈரோட்டில் நடந்த விழாவில் ஈரோடு மாநகராட்சியை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்துப் பேசினார்.

முதல்வர் பேசுகையில், ஈரோடு குருகுலத்தில் இருந்தபோது, அறிவை வளர்க்கவும், பகுத்தறிவை ஊன்றவும், எழுத்தறிவை ஊட்டவும் என் முதல் குருவாக இருந்து என்னை வழி நடத்திய, வழி நடத்துகின்ற தந்தை பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

ஈரோடு குருகுலத்தில் நான் இருந்தபோது, குடியரசில் எழுதும் வாய்ப்பை எனக்குப் பெரியார் கொடுத்தார். நான் முதன் முதலில் எழுதிய தீட்டாயிடுத்து என்ற தலையங்கத்தைப் பார்த்து பெரியார் மிகவும் பாராட்டினார்.

திருவையாறு தியாகராயர் விழாவில் பங்கேற்ற தண்டபாணி தேசிகர் என்ற தமிழர், தமிழில் பாடினார் என்பதால்அங்கு பாட மாட்டேன் என்று ஒரு கர்நாடக சங்கீதப் பாடகர் கூறினார். அதைக் கண்டித்துத்தான் நான் அந்தக் கட்டுரையை எழுதினேன். அதற்காக என்னைப் பெரியார் பாராட்டினார்.

1917ம் ஆண்டு ஈரோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற பெரியாரின் கனவு குறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த முப்பெரும் விழாவில் எனக்கு அமைச்சர் ராஜாவும், சுப்புலட்சுமி ஜெகதீசனும் ஒரு கடிதத்தைக் காட்டிக் கூறினார்கள். அந்த நேரத்தில் எந்தளவுக்கு நான் மெய் மறந்தேன் என்பதையும் இங்கு நினைவு கூர்ந்தார்கள்.

அவர் தன் கைப்பட எழுதி வைத்த விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளேன். ஆசானின் கட்டளையை நிறைவேற்றுவதில் என்னை விட பாக்கியசாலி யார் இருக்க முடியும். இது என்னைப் பெற்ற தாய், தந்தையர் செய்த தவமாகும்.

தற்போது தமிழகத்தில் பெரியார் சமத்துவபுரம் 113 உள்ளது. இன்னும் 100 சமத்துவபுரங்கள் உருவாக வேண்டும். இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் பெரியாரின் விருப்பம். அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்றார் கருணாநிதி.

நிறைவேறிய பெரியார் கனவு - ஸ்டாலின்

உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஈரோடு மாநகராட்சியானதால் பெரியார் கண்ட கனவு 90 வருடங்களுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நான் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் இந்த நிகழ்வு எனது வாழ்க்கையில் மறக்க முடியாது.

கடந்த 1 ஆண்டில் உள்ளாட்சி துறையில் பல்வேறு சாதனைகளை நிறைவேற்றியுள்ளோம். மாநகராட்சிகள், நகராட்சிகளின் கடன் சுமையை குறைக்க ரூ.760 கோடி அசல் மற்றும் கடனை தள்ளுபடி செய்துள்ளோம்.

கோபி, சத்தியமங்கலம், பவானி, ஈரோடு நகராட்சிகளின் அசல் ரூ.7 கோடியே 96 லட்சம், வட்டி 5 கோடியே 22 லட்சம் என மொத்தம் ரூ.13 கோடியே 18 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு நகராட்சியில் ரூ. 1 கோடியே 51 லட்சம் அசல் மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் நிதிக் கடன் அனைத்து துறைகளின் சார்பில் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 5 வருடங்களில் அனைத்து பஞ்சாயத்துகளும் மிகப் பெரிய வளர்ச்சியடையும்.

அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளின் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகள் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 வருடங்களில் அனைத்து பேரூராட்சிகளிலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

இதன் மூலம் நகர்ப்புறம் மட்டுமில்லாமல், பேரூராட்சி கிராப்புற வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்கள் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார் மு.க.ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+