திமுகவிடம் மகளுக்கு எம்பி சீட் கேட்டேனா-ராமதாஸ் மறுப்பு

இது குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு ராமதாஸ் அளித்துள்ள பேட்டியில்,
இப்போதெல்லாம் 15 வயது சிறுவர்கள் கூட மது குடிக்கிறார்கள்.
முதல்வரை சந்தித்தபோது மது ஒழிப்பு பிரசாரத்தை பற்றி பேசினேன். நீங்கள் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டாலும், படிப்படியாக அமல்படுத்தலாம் என்று அவரிடம் சொன்னேன். அவரும் அதனை கேட்டுக் கொண்டார். மது ஒழிப்பு தொடர்பாக நான் மேற்கொள்ள இருக்கும் பிரசார பயணத்தை பற்றி அவரிடம் கூறினேன்.
தமிழக பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் முதல்வரி கருத்து சொன்னேன். மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவுட்கம் பட்ஜெட், எகனாமிக் சர்வே, ஆக்ஷன் டேக்கன் ரிப்போர்ட் என பல ஆய்வு அறிக்கைகளை வெளியிடுகிறார்.
அதுபோல், தமிழகத்திலும் பட்ஜெட்டுக்கு முன்பு நாமும் ஒரு திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டு, மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடலாம். பெண்களுக்கும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யலாம். இதிலும் நாம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழலாம் என்று முதல்வரிடம் கூறினேன்.
மகளுக்கு எம்.பி. சீட்?:
பத்திரிகைகளில் எங்களைப் பற்றி இல்லாததும், பொல்லாததும், சொல்லாததும், கற்பனைக்கு எட்டாததுமாக எழுதாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது போலும். சில பத்திரிகைகளை இதனை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்.
முதல்வர் கருணாநிதியிடம் என் மகளுக்கு ராஜ்யசபா சீட் கேட்டதாக எழுதுகிறார்கள். அதைப் போல் நாங்கள் இருவரும் எதையும் பேசவில்லை. ராஜ்ய சபா சீட் பற்றி நாங்கள் பேசவே இல்லை.
இதுபோல கற்பனைக்கு எட்டாமல் எழுதிய நிருபரை நானும், கலைஞரும் அழைத்து வந்து, சத்தியமாக அது மாதிரி நாங்கள் பேசலை' என்று இருவரும் அவர் தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட, அந்த நிருபர் அதனை நம்பமாட்டார். ஏனென்றால் அவர் எழுதியது பொய் என்று அவருக்குத் தெரியும்.
தலையில் அடித்து சத்தியம் செய்தபிறகு, அது பற்றி எழுதினாலும், தலையில் அடித்து சத்தியம் செய்தாலும், முன்பு எழுதியதில் உண்மை இல்லாமல் இல்லை' என்று மட்டும் ஒரு வரியை எழுதுவார்.
நான் அதுபோல் பேசவில்லை என்பதை எப்படி நிரூபிப்பது?. பெங்களூருக்கு அழைத்து போய் சிலரை மனரீதியாக உண்மை பேச வைக்க நவீன கருவிகள் உதவியுடன் டெஸ்ட் செய்கிறார்களே. அதுபோலத்தான் செய்ய வேண்டும் போலிருக்கிறது.
இல்லையென்றால், இனிமேல் நாங்கள் பேசும்போது அந்த நிருபரையும் சாட்சிக்கு வைத்துக் கொள்ளலாம். ஆனாலும், அவர் திரும்ப வந்து பொய்யாகத்தான் எழுதுவார். இதுபோன்ற பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, புனை சுருட்டு செய்திகளை தடுத்து நிறுத்துவததற்கு வழி தெரியவில்லை.
நான் இன்று, நேற்றல்ல. 15 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காக தீவிரமாக குரல் கொடுத்து வருகிறேன். எங்கள் மகளிர் சங்கத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக கிராமம் கிராமமாகச் சென்று சாராயத்தை காய்ச்சும் ஊறலை அழிப்பது போன்ற பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். முன்பு, தமிழகம் மதுக்கொடுமையில் தத்தளித்துக் கொண்டிருந்ததாக சொன்னேன். ஆனால், இப்போதோ தமிழ்நாடு மது என்னும் பெரிய வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
ஏழைகள், உழைத்த களைப்பின் வலி போவதற்காக குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று அதிக அளவில் குடித்து வருகிறார்கள். மதுவினால் ஏற்படும் சீர்கேடுகள் யாருக்கும் தெரியாததல்ல. அந்த சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டு அவர்கள் உயிரிழக்கின்றனர். இதனால் தமிழகத்தில் பல லட்சம் பேர் விதவைகளாக ஆகியுள்ளனர். தகப்பன்களை இழந்த லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மது வீட்டுக்கு கேடு, நாட்டுக்கு கேடு என்று மது பாட்டில்களிலும், டாஸ்மாக் கடைகளிலும் எழுதிவைத்து விட்டு அரசே மது விற்பனை செய்து கொண்டிருக்கிறது. இது வெட்கக்கேடு.
மதுஒழிப்பு பற்றி இந்த அரசிடமும் கூறினேன். முந்தைய அரசிடமும் இது பற்றி வலியுறுத்தி வந்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அதனால்தான் மதுவின் கொடுமை பற்றி பரப்புரையை மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்தேன்.
இதற்காக நான் மேற்கொள்ளும் பிரசார பயணப் பாதையில் மதுரை, சேலம், கரூர் போன்ற பல இடங்களில் காந்தீயவாதிகள் போன்றவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்துகிறோம்.
கூட்டணி குறித்த கேள்விக்கு ஏற்கனவே பல முறை பதில் அளித்தாயிற்று. முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த நிருபர்களிடம், நாங்கள் நூற்றுக்கு 200 சதவீதம் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்தேன். அதையேதான் உங்களிடமும் சொல்வேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications