உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி பதவியேற்றார்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஏ.பி.ஷா டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்குப் பதில் ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த அசோக் குமார் கங்குலி புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தலைமை நீதிபதியாக அசோக் குமார் கங்குலி இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை தர்பார் மண்டபத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
முதலில் தலைமை நீதிபதியாக அசோக் குமார் கங்குலி நியமிக்கப்பட்டிருப்பதற்கான குடியரசுத் தலைவரின் உத்தரவை தமிழக பொதுத் துறை செயலாளர் ஜோதி ஜெகராஜன் வாசித்தார். இதைத் தொடர்ந்து ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் கருணாநிதி, தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார். புதிய தலைமை நீதிபதிக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்து மலர்ச் செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள், உள்துறை செயலாளர் மாலதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 23வது தலைமை நீதிபதி கங்குலி. 1947ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் பிறந்த இவர், எம்.ஏ, எல்.எல்.பி படித்துள்ளார்.
1971ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பணியை தொடங்கினார்.
உச்ச நீதிமன்றத்திலும் அரசியல் சாசனம், தொழிலாளர் நலன், கம்பெனி மற்றும் கல்வி விவகாரம், வருவாய், சுங்கம், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலும் அவர் ஆஜராகியுள்ளார்.
1994ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அசோக் குமார் கங்குலி அதே ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2000ஆவது ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பணிபுரியத் துவங்கினார்.
2006ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஒரிசா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட அசோக் குமார் கங்குலி கடந்து ஆண்டு மார்ச் 2ம் தேதி அதே நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.












Click it and Unblock the Notifications