படுகர்கள் கோவிலில் ஜெ. வழிபாடு - நடனமாடி உற்சாகம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டில் ஏப்ரல் 9ம் தேதி முதல் கோடை விடுமுறையைக் கழித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கொடநாடு அருகே உள்ள ஹாலமலை என்ற இடத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் கோவிலில் படுகர் இனத்தவர் கூடி வழிபட்டனர்.
இந்த விழாவில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். இதற்காக அவர் காரில் வந்தபோது படுகர் இனத்தவர், தங்களது பாரம்பரிய முறைப்படி ஜெயலலிதாவை வரவேற்றனர். அவருக்கு தங்களது பாரம்பரிய உடையையும் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர். ஜெயலலிதாவும் வெள்ளை நிற மேலங்கியை அணிந்து கொண்டார்.
பின்னர் கோவிலுக்குள் ஜெயலலிதா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசேஷ வழிபாடு நடத்தப்பட்டது. படுகர் இன ஸ்லோகங்களை சொல்லி படுகர் இன பூசாரிகள் பூஜை செய்தனர். பின்னர் ஜெயலலிதாவுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த ஜெயலலிதா கோவிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தலின் கீழ் இருக்கையில் அமர்ந்தார். அப்போது படுகர் இனப் பெண்கள் கூட்டமாக கூடி ஜெயலலிதா முன்பு நடனம் ஆடினர். அந்த ஆட்டத்தை சிறிது நேரம் ஜெயலலிதா ரசித்துப் பார்த்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கையிலிருந்து எழுந்த ஜெயலலிதா, நடனமாடிக் கொண்டிருந்த படுகர் இனப் பெண்களுடன் ேசர்ந்து தானும் நடனம் ஆடத் தொடங்கினார்.
முகம் நிறைய உற்சாகத்தோடும், புன்னகையோடும், கைகளை மேலே உயர்த்தியபடி, படுகர் இன நடனத்தை ஜெயலலிதா ஆடியதை அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான படுகர் இனத்தவர்களும் உற்சாகமாக வரவேற்று அவர்களும் ஆடினர். இதனால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டது.
சில நிமிடங்கள் நடனமாடிய ஜெயலலிதா படுகர் இனத்தவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நடனடமாடிய அனுபவம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறுகையில், படுகர் இனத்தவருடன் சில நிமிடங்களை செலவிட்டது மறக்க முடியாது அனுபவமாக இருந்தது. அவர்களுடன் நடனமாடியது வித்தியாசமான அனுபவம் என்றார்.












Click it and Unblock the Notifications