ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால் ராமேஸ்வரம் தீவில் மீன் பிடி தொழில் ஸ்தம்பித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள், இலங்கைகடற்படையின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தனர். பலர், கை, கால்களை இழந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மீனவர்களை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
இதையடுத்து தொடரும் இலங்கை தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையின் தாக்குதலிலிருந்து தங்களை காப்பாற்றக் கோரியும் ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
1000க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள், 3000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் இந்த போராட்டில் கலந்துகொண்டுள்ளன. இன்று காலை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.
போராட்டம் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஜே. போஸ் கூறுகையில், மீனவர்கள் யாரும் கடலுக்குப் போகவில்லை. மீனவர்கள் தவிர மீன் பிடி தொழிலுடன் சம்பந்தப்பட்ட அனைவருமே எங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் மீன் பிடி தொழில் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
ஜூலை 10ம் தேதி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒரு நாள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பாம்பனில் சாலை மறியல், ரயில் மறியல் ஆகியவை நடத்தப்படும் என்றார்.
மீனவர்களின் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ராமேஸ்வரம் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரத்தின் முக்கிய பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications