'தட்ஸ்தமிழ்' - இந்தியா சுடர் உதவியால் கல்வித் தடை நீங்கிய கரூர் பள்ளி!
கரூர்: 'தட்ஸ்தமிழிலில்' வெளியான செய்தியைத் தொடர்ந்து, இந்தியா சுடர் என்கிற தன்னார்வ தொண்டு அமைப்பு உதவிக் கரம் நீட்டியதால், கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் கிடைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 140 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆனால் இப்பள்ளியில், தலைமை ஆசிரியரோடு சேர்த்து மொத்தமே இரண்டு பேர் தான். இதனால் மாணவர்கள் முறையாக கல்வி கற்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த அவல நிலை குறித்தும், ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவது குறித்தும் 'தட்ஸ்தமிழ்' செய்தி வெளியிட்டிருந்தது.
இதைப் பார்த்த இந்தியா சுடர் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் உடனடியாக களத்தில் இறங்கியது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலமணிகண்டன் உடனடியாக பள்ளிக்கு சென்று உண்மை நிலவரத்தை ஆராய்ந்தார். அதன் அடிப்படையில் தனது நிறுவனத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை குறித்து அறிக்கை அளித்தார்.
இதைத் தொடர்ந்து மகேஷ்வரி, செந்தில்வடிவு என இரு ஆசிரியைகள், தொண்டு நிறுவனம் சார்பில் அரசு ஆரம்பப் பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இரு ஆசிரியைகளும் தற்போது மாணவ, மாணவிகளுக்கு ஆர்வமுடன் கல்வி போதித்து வருகின்றனர்.
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை இந்தியா சுடர் அமைப்பே ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரனிடம் கேட்டபோது, பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இன்றி பாடம் நடத்த முடியாமல் சிரமாக இருந்தது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பள்ளியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்கவும் தயக்கமாக இருந்தது. மேலும் போதிய ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே தரமான கல்வியை தர முடியும்.
இது போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்வி ஒளி கொடுத்த இந்தியா சுடர் நிறுவனத்திற்கும், அதற்கு உதவியாக இருந்த 'தட்ஸ் தமிழ்' இணையதளத்திற்கும் நன்றிகள் என்றார்.
அறியாமை இருள் போக்கும் கல்வி விளக்கு அணையாமல் காத்திட்ட இந்தியா சுடரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
இந்தியா சுடர் கல்வி அறக்கட்டளை:
இந்தியா சுடர் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனம் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்களுக்கு நிதியுதவி செய்வது, பொருளாதார ரீதியில், நலிவடைந்த பிரிவினருக்கு உதவி செய்வது உள்ளிட்ட பணிகளில் இந்தியா சுடர் ஈடுபட்டுள்ளது.
பல பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், குழந்தைகளுக்கான கல்வி என்பதை தனது முக்கிய நோக்கமாகவும், சேவையாகவும் இந்தியா சுடர் கொண்டுள்ளது.
தமிழகம் தவிர, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களிலும் தனது சேவை வெளிச்சத்தை பரப்பி வருகிறது இந்தியா சுடர்.
ஊரகப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டு, அங்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, அவற்றுக்கு என்ன தேவை என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ற உதவிகளை இந்தியா சுடர் செய்து வருகிறது.
இந்தியா சுடர் சார்பில் டியூஷன் மையங்களும், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்ளும் செயல்படுகின்றன.
மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பென்சில், பேனா உள்ளிட்டவை, பள்ளி பைகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவற்றை ஆண்டுதோறும் வழங்குகிறது இந்தியா சுடர்.
கருத்தரங்குகள், சுய முன்னேற்ற திட்ட நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், புதிர்ப் போட்டிகள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் இந்தியா சுடர் நடத்துகிறது.
இந்தியா சுடர் குறித்த மேலும் விவரங்களுக்கு http://www.indiasudar.org/ என்ற இணையதளத்தை அணுகலாம்.
(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் செய்தியாளர்)













Click it and Unblock the Notifications