ஸ்டாலின்-மேயர், அமைச்சர், அடுத்து...கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மு.க.ஸ்டாலினிடம் உள்ள ஊக்கம்தான் இன்றைக்கு அவரை மேயராக்கி, அமைச்சராக்கி, இன்னும் என்னென்னவோ ஆக்கப் போகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான்சாலை - துரைசாமி சாலை சந்திப்பில் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், உஸ்மான் சாலை, துரைசாமி சாலை இந்த இரண்டு சாலைகளும் இணைகின்ற மேம்பாலத்தின் திறப்பு விழா இது என்று நான் தொடக்கத்திலே சொன்னேன். இதுவே ஒரு சமுதாய ஒற்றுமையை, நல்லிணக்கத்தைக் காட்டுகின்ற அமைப்பாகும்.

ஒரு சாலை உஸ்மான் பெயரால்- உஸ்மான் என்றால் அவர் இஸ்லாமியர் என்று சொல்லத் தேவையில்லை. இன்னொரு சாலை துரைச்சாமியின் பெயரால். அவரை சொல்லித் தெரியும் உங்களுக்கு. இந்த வட்டாரத்திலே டாக்டராக இருந்த, அய்யர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர்.

ஆக ஒரு அய்யரும், ஒரு இஸ்லாமியரும் சாலைகளின் மூலமாக இன்றைக்கு இணைகிறார்கள். அந்த இணைப்பைக் கூட எங்களால்தான் செய்ய முடிந்திருக்கிறது என்பதற்கு அடையாளமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இணைப்பு விழாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் இணைந்து நடத்துகின்றனர். இன்னும் பல இணைப்புகள் காத்திருக்கின்றன, அதையும் நீங்கள் ஆற்றிட வேண்டும் என்ற குறிப்பை மாத்திரம் ஸ்டாலினுக்கும், மற்றவர்களுக்கும் குறிப்பிட விரும்புகிறேன்.

சென்னைக்கு நான் குடி வந்த புதிதில், முதன் முதலாக ஒரு வீட்டை எடுத்து வாழத் தொடங்கினேன் இதே தியாகராய நகரில். அதுவும் காமராஜருடைய இல்லத்திற்குப் பக்கத்திலேதான் நான் இருந்த வீடு.

அப்போது எப்படி இருந்தது சென்னை. இங்கே இருக்கின்ற ரயில்வே கேட்- அதைத் தாண்டி செல்ல கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களுக்கு செல்ல வேண்டிய நடிகர்கள் எல்லாம் எவ்வளவு நேரம் காத்துக் கிடக்க வேண்டியிருந்தது. இந்த சீரங்கப்பாளையம் என்று சொல்லப்படுகின்ற இடத்திலே நான் குடும்பத்தோடு குடியிருந்தேன்.

அப்போது ஒரு அவசர உதவிக்கு- அதுவும் ஸ்டாலினைக் காப்பாற்ற நாங்கள் பட்டபாட்டை இப்போது எண்ணிப் பார்த்தாலும், ஏ அப்பா இப்போது சென்னை எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அங்கே பக்கத்திலே ஒரு ரயில்வே கேட்- அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய காலனி. அந்தக் காலனியில் ஒரு வீட்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்போது ஸ்டாலின் ஒரு சின்ன குழந்தை. ஒரு ஊக்கை விழுங்கி விட்டான். இப்போதுதான் புரிகிறது- அவன் ஒரு ஊக்கை விழுங்கவில்லை. ஊக்கத்தை விழுங்கியிருக்கிறான் என்று. அந்த ஊக்கம்தான் இன்றைக்கு அவரை மேயராக்கி, அமைச்சராக்கி, இன்னும் என்னென்னவோ ஆக்கப் போகிறது.

நான் அடுத்தடுத்து மாநகராட்சி மன்றத்திற்கோ அல்லது மாநகராட்சிகளை பல இடங்களில் உருவாக்குவதற்கான இந்த மாநில ஆட்சியைப் பெறுவதற்கோ, திமுக தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய வேளை இது.

என்னையே நம்பி ஏற்றேன் இந்தப் பழியை என்று சொல்லக் கூடிய காலமும் வரலாம், வராமலும் இருக்கலாம்.

இன்னும் ஒரு ஐந்தாண்டு காலம் நீங்கள் இந்த சென்னை மாநகரத்திலே அரும்பாடுபட்டு உங்களுடைய பணிகளை நிகழ்த்துவீர்களேயானால் எனக்கே கூட சென்னையைப் பார்த்தால் அடையாளம் தெரியாமல் போய் விடக் கூடும்.

இன்னும் சென்னை நகரம் வளர வேண்டும். மும்பையைப் போல, டெல்லியைப் போல அகன்ற தெருக்களை உடையதாய், பிரகாசமிக்கதாய் வளர வேண்டும். அப்படி வளர்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பெல்லாம் தேவை. அப்படி வளர்வதற்கேற்ற வகையில்தான் இந்தப் பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

தொகுப்புரை வழங்கிய சுதா சேஷையன் ஒரு சிறிய தவறு செய்தார். ஜெமினிக்குப் பக்கத்திலே இருக்கிற அண்ணா மேம்பாலம் என்றார். அண்ணா மேம்பாலம் என்றால் அது எங்கே இருக்கிறதென்று அகில உலகத்திலே உள்ளவனுக்கும் தெரியும். அதற்கு ஜெமினியை சுட்டிக் காட்டித்தான் அண்ணா மேம்பாலம் இருக்கிறது என்றால் அதைநான் அவமானமாக கருதுகிறேன். அது நான் ஜெமினியை நினைத்து கூறுகின்ற அவமானம் இல்லை.

ஒரு காலத்திலே ஜெமினி பாலம் என்று அழைக்க வேண்டியிருந்தது. அது அண்ணா மேம்பாலமாக ஆன பிறகும் அதை மறந்து விட்டு ஜெமினி பாலம் என்று சொல்லலாமா...

கடற்கரை சாலையை காமராஜர் சாலை என்று அழைக்கிறோம். அந்தப் பெயரை வைத்தவனும் நான்தான். இன்றைக்கு எத்தனை பேர் அதைச் சொல்கிறார்கள். இன்னும் பீச் ரோடு என்றுதான் சொல்கிறார்கள்.

காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்கிறோம். காமராஜர் சாலையைக் கூட காப்பாற்றுகின்ற யோக்கியதை நமக்கு இல்லை என்றால் பிறகு என்ன. காமராஜர் சாலையைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. ஆனால் காமராஜர் ஆட்சியைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதைப் போலத்தான், தி.நகர். தியாகராய நகர், யார் தியாகராயர், உன்னையும், என்னையும் இங்கே சம ஆசனம் கொடுத்து அமர வைத்திருக்கிறாரே அவர்தான் தியாகராயர். அந்தத் தியாகராயர் நீதிக்கட்சியின் தலைவர். நீதிக் கட்சி இல்லாவிட்டால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த நாட்டில் வேலை கிடைத்திருக்காது, படிப்பு கிடைத்திருக்காது. அந்த தியாகராயர் அவருடைய பெயரால் இந்த நகருக்கு தியாராய நகர் என்று சூட்டினார்கள்.

இன்றைக்கு என்ன செய்கிறார்கள், ஏ அப்பா, முழுப் பெயர் இருந்தால் தியாகராய நகரா, யார், அவர் என்று வெளியூர்க்காரன் கேட்பான், தியாகராயர் என்றால் அவர் நீதிக் கட்சியின் தலைவர், சென்னை மாநகர மன்றத்தின் தலைவராக இருந்தவர் என்றெல்லாம் சொல்லி அவருடைய கொள்கைகளைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே முழுப் பெயரும் வைக்கக் கூடாதென்று தி.நகர் என்கிறார்கள்.

திருவல்லிக்கேணி என்ன சின்னப் பெயரா. அதை மாத்திரம் முழுப் பெயரால் அழைக்கலாம், தியாகராய நகரை முழுப் பெயரில் அழைக்கக் கூடாதா. காரணம், திட்டமிட்டு பலகாரியங்கள் நடைபெறுகின்றன.

கருணாநிதி நகர் என்றால் கே.கே.நகர்- இன்னும் 10 ஆண்டுகள் சென்ற பிறகு அது கீக்கி நகர் என்றாகி விடும். ஏனென்றால் வரலாற்றுப் பெயர்களை, இன உணர்வுக்கு தூண்டுதல்களாக இருந்த பெயர்களை எல்லாம் அழித்து ஒழிக்க வேண்டும் என்பதுதான் சில வஞ்சகர்களுடைய திட்டம். நான் எல்லோரையும் சொல்லவில்லை. அப்படிச் செய்பவர்கள் வஞ்சகர்கள். அது வஞ்சகர்களுடைய திட்டம், வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+