அதிமுகவுடன் இணைந்து போராட தயார்-ராமதாஸ்
தேனி: மக்கள் பிரச்சனையில் அதிமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒன்றினைந்து போராடினால் பாமக துணை நிற்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தேனி வந்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன் குழு நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 27 மாவட்டங்கள் உயர்கல்வியில் பின்தங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எத்தனை பேர், வெளிமாநில மாணவர்கள் எத்தனை பேர் என்பதை உயர்கல்வி அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
தேனி மாவட்டம் 4 முதல்வர்களை தந்துள்ளது. ஆனால் இங்கு ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. இங்கு அரசு கலை கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்.
ஒரு ரூபாய் அரிசி வேண்டாம். கலர் டிவியும் வேண்டாம். மதுவை ஒழியுங்கள். இல்லை என்றால் ஒரு ரூபாய் அரிசி வாய்க்கரிசியாகத்தான் பயன்படும் என்று தமிழக பெண்களே கூறுகின்றனர். மின்வெட்டை கண்டித்தும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை பதவி விலக வலியுறுத்தியும் பாமக சார்பில் 16ம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மக்கள் பிரச்சனையில் அதிமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒன்றினைந்து போராடினால் பாமக துணை நிற்கும். அப்படி போராடுவதில் தப்பில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications