தீபாவளி பாதுகாப்பு: சென்னை தி.நகரில் 1000 போலீஸ் குவிப்பு
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடுவோரைப் பிடிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள தியாகராய நகரில் ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் சேகர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி சென்னை நகரின் மையப் பகுதியான தி.நகரில் ஜவுளி உள்ளிட்டவை வாங்க கூட்டம் அலை மோதி வருகிறது. இதையடுத்து பிக் பாக்கெட், சங்கிலி திருட்டு போன்ற குற்றச் செயல்களை தடுக்கவும், திருடர்களைப் பிடிக்கவும், ரங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றை ஆணையர் சேகர் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பண்டிகைக் காலத்தில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுக்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கவும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.நகரில் 16 கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தியிருக்கிறோம்.
மேலும் 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அவற்றிலிருந்தும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். அத்துடன் 18 போலீசார் கூட்டத்தில் ஊடுருவி முக்கிய இடங்களில் இருந்து கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு செய்வார்கள்.
இவை தவிர கண்காணிப்பு கேமிராக்களின் கட்டுப்பாடு அமைக்கப்பட்டுள்ள தி.நகர் துணைக் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.
பிக் பாக்கெட் திருடர்கள், வாகனத் திருடர்கள் அடங்கிய போஸ்டர்களும் பல்வேறு இடங்களில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. கடைகளிலும் இவை வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாப்பாக கடைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு உதவுவதற்காக தி.நகர் பகுதியில் 2 ஆம்புலன்ஸ் வண்டிகளும், 3 தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கு 8 குடிநீர் தொட்டிகளும் வைக்கப் பட்டுள்ளன.
வாகனங்களை நிறுத்துவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அதன்படி முத்துரங்கன் சாலை, ஜி.என். செட்டி சாலை, சோமசுந்தரம் விளையாட்டு மைதானம், வெங்கட்நாராயணா சாலை, ராமநாதன் தெரு உள்ளிட்ட 15 இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி செயய்யப்பட்டுள்ளது.
தி.நகர் பகுதி முழுவதும் தீபாவளி திருட்டுகளை தடுப்பதற்காகவும், பொதுமக்களுக்கு உதவுவதற்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications