கட்சி ஆரம்பித்ததது காசி, ராமேஸ்வரம் போகவா! - விஜய்காந்த்
சென்னை: தேமுதிக என்ற கட்சியை நான் ஆரம்பித்தது காசி, ராமேஸ்வரம் போக அல்ல, ஆட்சியைப் பிடிக்கவே என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
நேற்று சென்னையில் நடந்த தேமுதிக இளைஞரணி மாநாட்டில் விஜயகாந்த் பேசியது:
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ஆட்சியை பிடிக்கத்தான் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தொடங்குவது ஆட்சியை பிடிக்காமல், காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போகவா?
ஓர் இடத்தை அடைய வேண்டுமானால் குறிக்கோள் இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்கவே கட்சியை ஆரம்பித்தோம். ஆட்சியைப் பிடிக்க ஏன் ஆசைப்படக்கூடாது? ஆட்சியைப் பிடிக்கவே கட்சி. நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை. மக்களுக்காக இருக்கும் கட்சி தேமுதிக மட்டுமே.
தமிழகத்தை இருளில் தள்ளியுள்ளது மின்வெட்டு. திமுகவில் வீராசாமியும், அதிமுகவில் ஜெயலலிதாவும் மின் வெட்டு பிரச்சனையில் மக்களை ஏமாற்றுகிறார்கள். மின்வெட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று முன்னாள் அதிமுக அமைச்சர் கேட்கிறார். அவர்களை நான் கேட்கிறேன், நீங்கள் கூட்டணியில்லாமல் தேர்தலைச் சந்திக்கத் தயாரா?
வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்களா? தமிழகத்தில் படித்தவர்களை விட படிக்காதவர்கள்தான் அதிகம். படித்தவர்களுக்கே வேலை இல்லை. 3 லட்சம் பேருக்கு வேலை தருவதாக முதல்வர் சொல்கிறார். அதில் 3 சதவீதம் உடல் ஊனமுற்றவர்களுக்கு. அப்படிப் பார்த்தால் ஊனமுற்ற 9 ஆயிரம் பேருக்கு வேலை தந்தார்களா?
அடுத்ததாக, வருடா வருடம் 5 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறினார். 2006ல் இருந்து எடுத்துக் கொண்டால் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் எனது சொந்தப் பணம் ஒன்றரை கோடி ரூபாயில் வேலை வாய்ப்புக்கு வழி செய்துள்ளேன்.
ஊழலை மறைக்கவே...
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக பேசுகிறார்கள். அந்தப் பணத்தை வாங்கியது யார் என்று கேட்டால் தெரியாது என்கிறார்கள். இதையெல்லாம் மறைக்கத்தான் இலங்கைத் தமிழர் பற்றி கருணாநிதி இப்போது பேசுகிறார்.
காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் ஊழல் செய்தார்களா? கருணாநிதி மீதும், ஜெயலலிதா மீதும் தான் ஊழல் வழக்குகள் போடப் பட்டன. இப்படி ஊழல் செய்பவர்களுக்கு ஓட்டு போட்டால் நாடு எப்படி இருக்கும்.
தேமுதிகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு, அப்புறம் பாருங்கள்!
தேர்தல் நெருங்குகிறது. அதற்குத் தயாராகுங்கள். கட்சியினர் ஒவ்வொருவரும் நூறு ஓட்டுகளையாவது வாங்கித்தர வேண்டும். தேர்தலில் எதற்கும், யாருக்கும் பயப்படக்கூடாது என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications