ஆட்சியின் சீர்கேடுகளை மறைக்க ஈழத் தமிழர் நாடகம்-விஜய்காந்த்

இலங்கைத் தமிழர்களுக்காக இன்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத்தில் அவர் பேசியதாவது:
மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சனைகளை திசை திருப்பு வதற்காக ஈழத்தமிழர் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு முதலமைச்சர் கருணாநிதி கண்துடைப்பு நாடகத்தை நடத்தி வருகிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நடிகர்கள் ராதாரவி, சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களுடன் இணைந்து நான் 1983ம் ஆண்டு முதல் என்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறேன்.
ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம், கவர்னர் மாளிகை முன்பு போராட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் சிங்கள தூதரகத்திற்கு சென்றது போன்ற எத்தனையோ போராட்டங்களில் பங்கெடுத்தவன் நான்.
பெரியார் திடலில் நடிகர் மணிவண்ணனுடன் சேர்ந்து நிதி திரட்டுவதற்காக நாடகம் நடத்தி இருக்கிறேன். இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளையோ, இலங்கை அரசையோ உண்ணாவிரதத்தில் கண்டித்துப் பேசக்கூடாது என்று நடிகர் சங்கம் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நம்முடைய உணர்வுகளை தெரிவிப்பதற்கு நமக்கு உரிமை உண்டு. இலங்கை அரசை தட்டிக் கேட்கக்கூடாது என்று சொல்லக்கூடாது. மனிதர்கள் கொல்லப்படும்போது அதனை தட்டிக்கேட்பதுதான் மனித நேயம். எனவே மனித நேயத்திற்கு புறம்பாக நடக்கும் இலங்கையை கண்டிப்பது தவறு கிடையாது.
ஆனாலும் அது பற்றி எல்லாம் நான் இங்கு பேசினால் அரசியல் ஆகிவிடும். நம்முடைய உணர்வுகளை கட்டுப்பாட்டுடன் பேசவேண்டும் என்று வேண்டுமானால் கூறலாம்.
இதுவரையில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. அந்நாட்டு அதிபர் ராஜபக்சே என்ன செய்தார். தன்னுடைய ஒரு சகோதரரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மற்றொரு சகோதரரை பாகிஸ்தானுக்கு அனுப்பினார். இலங்கை அதிபரின் இந்த நாடகத்தை மத்திய, மாநில அரசுகள் தானே தட்டிக்கேட்க வேண்டும்.
இங்கு நான் அரசியல் பேச வரவில்லை. ஆனாலும் என்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சபையினர் என்னை மன்னிக்க வேண்டும்.
1983ம் ஆண்டு முதல் போராடி பார்த்து விட்டோம். எங்கள் மாநாட்டில் கூட ராணுவத் தீர்வு கூடாது, அரசியல் தீர்வுதான் வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம்.
இலங்கை அரசு இந்தியாவை குறை சொல்ல முடியாது. இங்கே வேற்றுமையில் ஒற்றுமை உண்டு. ஆனால் இலங்கையில் சிங்களர்களையும், தமிழர்களையும் வேறுபடுத்தி நடத்துகிறார்கள்.
தமிழர்கள் மீது இலங்கை அரசு விமானத் தாக்குதலை நடத்துகிறது. காஷ்மீரைப் பிடிக்க நாமும் போராடுகிறோம். ஆனால் இந்திய அரசு இதுவரை அங்கு விமானத் தாக்குதலை நடத்தியது இல்லை. அதுதான் மனிதநேயம்.
ஆனால் இந்த மனித நேயத்தை ராஜபக்சே அரசு கடைபிடிக்க வில்லை. என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் என் ஒருமாத சம்பளத்தை ஈழத்தமிழர் நிவாரண நிதிக்கு முதலமைச்சரிடம் வழங்கிவிட்டு மாவட்டம் தோறும் வழங்க வேண்டும் என்றும் என்னுடைய கட்சியினரை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இப்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உணவு, உடை, மருந்து பொருட்களை அனுப்புகிறோம். இதேபோல காயம் பட்ட ஈழத்தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து நல்ல முடிவு காண வேண்டும் என்றார் விஜயகாந்த்.
கருணாநிதி நாடகம்:
அதன் பின்னர் உண்ணாவிரத பந்தலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த்,
இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் திமுக எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் கண்துடைப்பு.
அரசியல் தீர்வு என்று சொல்லிவிட்டு எந்தத் தீர்வும் இதுவரை இல்லை. 2006ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி கொடுத்த அறிக்கையிலும், 2007ம் ஆண்டு எம்.கே.நாராயணன் கொடுத்த அறிக்கையிலும், 2008ம் ஆண்டு ராணுவ அதிகாரி அருள் பிரகாசம் கொடுத்த அறிக்கையிலும் இலங்கைக்கு ராணுவம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சனைகளை திசை திருப்புவதற்கே இந்த கண்துடைப்பு நாடகத்தை முதலமைச்சர் நடத்தி வருகிறார்.
முதலில் தந்திகள் கொடுக்க வேண்டும் என்றார்கள், அடுத்ததாக எம்.பிக்கள் ராஜினாமா என்றார்கள், பின்னர் மனித சங்கிலி என்று திசைதிருப்பும் நாடகத்தை நடத்தினார்கள்.
இலங்கையில் சிங்களரும், தமிழரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அதற்கு மத்தியமாநில அரசுகள் முழுமையாக போராட வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்கு வாங்குவதற்கு மட்டும் இந்த பிரச்சனையை எடுக்கக்கூடாது. உணர்வுடன் செயல்படும் எந்தக் கட்சியுடனும் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்காக போராடத் தயார் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications